நிந்தவூரில் திடீர் வாகனச் சோதனை நடவடிக்கை; 3 வாகனங்களுக்கு தடை

அம்பாறை மாவட்ட மோட்டார் போக்குவரத்து வாகன பிரதான பரிசோதகர் ரொஹான் டீ சில்வா தலைமையில், நிந்தவூர் பகுதியில் நேற்று முன்தினம்(20) மாலை பாரிய திடீர் வாகனச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இந்தச் சோதனையில், அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியூடாகப் பயணிக்கும் நீண்ட மற்றும் குறுகிய தூரப் பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
பயணிகள் பேருந்துகள் போதிய பாதுகாப்புடன் உள்ளனவா, பயணிகளுக்கு உகந்த வசதிகள் காணப்படுகின்றனவா என்பது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஆபத்தான மேலதிக அலங்காரங்கள் மற்றும் உதிரிப்பாகங்களை உடனடியாக அகற்றுமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதுடன், விதிமுறைகளை மீறிய சில வாகன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இச்சோதனை நடவடிக்கையின் போது 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் 30 வாகனங்களில் சிறிய குறைபாடுகள் கண்டறியப்பட்ட நிலையில், அவற்றை 10 நாட்களுக்குள் சீர்செய்வதற்கான நிபந்தனையுடன் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது. எனினும், மிக மோசமான நிலையில் காணப்பட்ட 03 வாகனங்களுக்கு உடனடியாகத் திருத்தம் செய்ய வேண்டும் என ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டு, அவற்றின் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டது.
குறைபாடுகள் கண்டறியப்பட்ட வாகன உரிமையாளர்கள், எதிர்வரும் 10 நாட்களுக்குள் அவற்றைச் சீர்செய்து அம்பாறை மாவட்ட செயலகத்தில் உள்ள மோட்டார் போக்குவரத்து வாகனப் பரிசோதகர் காரியாலயத்தில் காண்பிக்க வேண்டும் எனவும், அதன் பின்னரே தடுத்து வைக்கப்பட்டுள்ள சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வாகன ஆவணங்களை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பிரதான பரிசோதகர் தெரிவித்தார். இந்த உத்தரவை மீறும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
இச்சோதனை நடவடிக்கையில் அம்பாறை மாவட்ட மோட்டார் போக்குவரத்து வாகனப் பரிசோதகர்களான எல். டபிள்யு. ஆராச்சி, துஷித திஸாநாயக்க மற்றும் போக்குவரத்து பொலிஸ் பிரிவின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி சி.ஐ. டி. பதிரன உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *