ஆசிரியர் தலையங்கம்: 12
வணக்கம் என் உறவுகளே!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் உழவு இயந்திரங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வந்த கரைவலைத் தொழில் திடீரென தடுக்கப்பட்டமை, நூற்றுக்கணக்கான கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதனை எதிர்த்து மருதங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சுண்டிக்குளம் – பூனைத் தொடுவாய் பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம், ஒரு தொழிலின் அல்ல; ஒரு சமூகத்தின் அவலக் குரலாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது.
கடந்த அரசின் காலத்தில் நீரியல்வளத் திணைக்களத்தினால் சட்டபூர்வ அனுமதி வழங்கப்பட்ட இந்த கரைவலைத் தொழில், தற்போது எந்த முன் அறிவிப்பும், மாற்றுத் தீர்வும் இன்றி அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை பெரும் சந்தேகங்களை எழுப்புகிறது.
தொழிலை திடீரென நிறுத்துவது என்பது பல கோடி ரூபாய் முதலீடுகளை நஷ்டத்தில் தள்ளுவதோடு, ஆயிரக்கணக்கான குடும்பங்களை நிர்க்கதியான நிலைக்குத் தள்ளும் முடிவாகும்.
அதேவேளை, சுண்டிக்குளம் கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்களின் றோலர் படகுகள் ஆக்கிரமித்து நிற்கும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்தத் தவறிய நிர்வாகம், உள்ளூர் கடற்றொழிலாளர்களின் கரைவலைத் தொழிலையே தடுக்க முனைவது நீதியின் இரட்டை நிலைப்பாடாகவே பார்க்கப்படுகிறது.
சட்டத்தை பலவீனர்களின் மீது மட்டும் அமல்படுத்தி, வலிமையான ஆக்கிரமிப்புகளுக்கு மௌனம் சாதிப்பது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
இன்றைய நிலையில், வடமராட்சி கிழக்கு பகுதியைச் சேர்ந்த பல கடற்றொழிலாளர்கள் புத்தளம், உடப்பு போன்ற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து கூலித் தொழிலாளர்களாக வாழ வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், பெண் தலைமைத்துவக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் இந்தத் தொழிலில் நம்பிக்கையுடன் ஈடுபட்டு வரும் நிலையில், அனுமதி மறுப்பு என்பது சமூக ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.
எனவே, இந்த விடயத்தில் ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் நேரடியாக தலையிட்டு,
– தொழிலாளர்களுக்கு கால அவகாசம் வழங்குவதோடு,
– அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகளுடன் நியாயமான தீர்வை முன்வைக்க வேண்டும்.
வாழ்வாதாரத்தை பாதுகாப்பது என்பது அரசின் பொறுப்பு.
ஒரு தொழிலை ஒழுங்குபடுத்துவது வேறு;
அதனை அழித்தொழிப்பது வேறு.
கடற்றொழிலாளர்களின் குரல் இன்று கரையில் ஒலிக்கிறது;
அதை கேட்க வேண்டியது நிர்வாகத்தின் கடமையல்லவா!
என்றும் அன்புடன்
ஆசிரியர்
அ.அருள் சஞ்ஜூத்
27.01.2026

