மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி பல்வேறு உள்ளூராட்சி மன்றங்களை வெற்றிகொண்டதன் காரணமாக நேற்று(06) இரவு பட்டாசு கொழுத்திக் கொண்டாடியது.
அத்துடன் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு, அவர்கள் ஊர்வலமாகவும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாநகர சபை உட்பட பல்வேறு உள்ளூராட்சி மன்றங்களிலும் இலங்கை தமிழ் அரசு கட்சி வெற்றிவாகை சூடியுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபையின் 20 வட்டாரங்களில் 16 வட்டாரங்களை இலங்கை தமிழ் அரசு கட்சி கைப்பற்றிய நிலையில் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலான மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மட்டக்களப்பு மாநகர சபையின் பல்வேறு வட்டாரங்களிலும் நேற்று மாலை வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற்றதுடன் வேட்பாளர்களை மக்கள் கொண்டாடிய நிகழ்வும் நடைபெற்றது.
இதேபோன்று ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெற்றிபெற்றதையடுத்து அங்கு ஆதரவாளர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளைப் பெற்ற இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேட்பாளரும் ஊடகவியலாளருமான செ. நிலாந்தனின் ஆதரவாளர்களினால் கட்சியின் சின்னத்தின் வடிவம் கொண்ட கேக் வெட்டி கொண்டாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.