பாரிய குழிகளைத் தோண்டி மண் அகழ்வதை எதிர்த்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்

வாழைச்சேனை கிண்ணையடி பிரதேசத்தில் மீன் வளர்க்கும் திட்டம் என்ற போர்வையில் பாரிய குழிகளைத் தோண்டி மண் அகழ்வதை எதிர்த்து பிரதேச மக்கள் மண்ணை ஏற்றிச் செல்லும் கனரக வாகனத்தை இன்று(08) வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிஸாருடன் பேசுவதற்கு சென்ற தமிழரசுக் கட்சி வேட்பாளர் உட்பட இருவரை கைது செய்ததயைடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன் பொலிஸாரின் அடாவடியை எதிர்த்து சுட்டெரிக்கும் வெயிலில் தொடர்ந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிண்ணையடி ஜஸ் உற்பத்தி நிலையத்துக்கு அருகாமையிலுள்ள தனியார் காணி ஒன்றில் 2021 ம் ஆண்டு மீன் வளர்க்கும் திட்டத்தின் கீழ் பாரிய குழிகளை தோண்டி மண் அகழ்ந்து வெளியிடங்களுக்கு எற்றிச் சென்று விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதனை கண்டித்து கடந்த காலத்தில் கிராமத்து இளைஞர்களின் கண்டன ஆர்ப்பாட்டங்களையடுத்து இத் திட்டம் இடைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் கடந்த முதலாம் திகதி குழிகளை தோண்டி மண் அகழ்வில் ஈடுபட்டதையடுத்து அங்கு சென்ற கிராம மட்ட அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மண் அழ்வில் ஈடுபட்டவர் தற்போது எங்களிடம் அனுமதி உண்டு என தெரிவித்து பொலிஸாருக்கு தெரிவித்த முறைப்பாட்டையடுத்து எதிர்ப்பு தெரிவித்தவர்களை பொலிஸார் கைது செய்து அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து பொலிஸ் பிணையில் விடுவித்தனர்.

இந்த நிலையில் சம்பவதினமான இன்று காலை 10.00 மணியளவில் பிரதேச மக்கள் ஒன்று திரண்டு அகழ்ந்த மண்ணை ஏற்றிக் கொண்டு வேறு இடத்துக்கு கொண்டு சென்ற கனகர வாகனத்தை வீதியில் வழிமறித்து எங்கள் கிராம மண் வளத்தை அழிக்காதே, மண் வளத்தை அழிக்கும் துரோகியே ஒழிக, சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பு என சுலோகங்கள் ஏந்தியவாறு குறித்த திட்டத்தினை நிறுத்த கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸாருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழரசு கட்சி வேட்பாளர் மற்றும் இளைஞன் சென்று பேசிய நிலையில் அவர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்த இருவரையும் விடுதலை செய்யுமாறு கோரிய நிலையில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக வழக்கு பதிவு செய்துவிட்டு அவர்களை பிணையில் விடுவித்தனர்.

இது தொடர்பாக அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் பிரதேச செயலாளர் நில அளவை சுரங்க பணியகம், மாவட்ட நன்னீர் மீன் வளர்ப்பு அலுவலகம் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை போன்ற திணைக்களங்களுடன் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றமையடுத்து வரும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் வரை இந்த மண் அகழ்வு இடை நிறுத்தி வைக்கஅதிகாரிகள் தீர்மானித்தனர்.

இருந்தபோதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்; அங்கு கொட்டகை அமைத்து அமர்ந்து தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *