கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பகுதியில் நேற்றிரவு புகுந்த காட்டு யானைகள் காரணமாக விவசாயி ஒருவரின் ஒரு ஏக்கர் வரையான வாழை மற்றும் தென்னைச் செய்கைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன.
புளியம்பொக்கனை கம நலசேவை பிரிவிற்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் வாழ்வாதாரத்தை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டிருந்த குறித்த ஒரு ஏக்கர் வாழைச் செய்கையும் தென்னை மரங்களும் யானைகளால் முழுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் யானைகள் புகுந்து செய்கைகளை அழித்துள்ளதாகவும், இதன் காரணமாக பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயி தெரிவித்துள்ளார்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து சேதங்களை மதிப்பீடு செய்து தமக்கு உரிய நஷ்டஈட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

