அரசின் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் 2026 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படவிருக்கின்ற சமூக வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குள் செயற்படுத்தப்படுகின்ற, செயற்படுத்தப்படவிருக்கின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாக கிராம மட்ட ‘பிரஜாசக்தி’ அமைப்பின் தலைவர்கள் மற்றும் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடுகின்ற நிகழ்வு கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று(16) இடம்பெற்றது.
சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் அன்வர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கரையோரப்பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும், இதில் கணக்காளர் அமிர் அலி, உதவி திட்டமிடல் பணிப்பாளர் மஜீட், சமுர்த்தி வங்கிச் சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் அம்சார், திட்ட முகாமையாளர் அஸீஸ், வங்கி முகாமையாளர்களான பரீரா, எம். பைசால், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர் ஆசிரியர் ஆரிப் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
சமுர்த்தி தொழில் முயற்சியான்மை வேலைத்திட்டம், இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல், தொழிற்பயிற்சி வேலைத் திட்டம், மொழி விருத்தி வேலைத்திட்டம், உளவளத்துணை வழிகாட்டல் வேலைத்திட்டம், சமுர்த்தி வங்கிகளில் நடைமுறைப்படுத்தப்படும் கடன் திட்டங்கள் தொடர்பான வேலைத்திட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் இந் நிகழ்வின் இறுதியில் 2025ஆம் ஆண்டுக்கான ‘ஷரன்விமன’ வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் ரூபாய் பத்து இலட்சம் பெறுமதியில் அமைக்கப்படும் மூன்று வீடமைப்புகளுக்கான இரண்டாம் கட்ட காசோலைகள் பாராளுமன்ற உறுப்பினரினால் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

