ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பணிபுரியும் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் ஒருவர் ரூ. 500 இலஞ்சம் கேட்டு பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருதமுனையில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினரால் இந்த கைது மேற்கொள்ளப்பட்டது.
புகாரின்படி, தொழிலதிபர் தனது மகளின் பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்ய பிரதேச செயலகத்திற்குச் சென்றிருந்தார். சந்தேக நபர் ஆரம்பத்தில் ரூ.1,000 இலஞ்சமாகக் கேட்டு ரூ. 500 பெற்றதாகவும், 1ஆம் திகதி அன்று பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழைப் பெறும்போது மீதமுள்ள ரூ.500 ஐக் கொண்டுவருமாறு புகார்தாரருக்கு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
பிறப்புச் சான்றிதழைப் பெறுவதற்காக புகார்தாரர் சந்தேக நபரைச் சந்தித்தபோது, மீதமுள்ள ரூ.500 ஐ இலஞ்சமாகக் கேட்டுப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
ஷபிறப்பு மற்றும் இறப்புப் பதிவாளராகக் கடமைகளைச் செய்வதற்காக அவரது வீட்டில் செயற்படும் அலுவலகத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அவர் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

