கல்முனையில் அபேதம் சமாதான கண்காட்சி

அம்பாறை மாவட்ட சமூகசார் அமைப்புகள் மற்றும் சமாதானத்திற்கான எதிர்காலத் திட்ட இளைஞர் குழு ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அபேதம் சமாதான கண்காட்சி 2026 கல்முனை கிறிஸ்த இல்லத்தில் இன்று(18) இடம்பெற்றது.
தந்தை செல்வாநாயகம் அறக்கட்டளை நிதியத்தின் அனுசரணையுடன், சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் ஜெலீல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் அதிசயராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
சர்வ மத தலைவர்களின் பங்குபற்றுதலோடு இடம்பெற்ற இந்த நிகழ்வில் தமிழ் முஸ்லிம் சமூகப் பெரியார்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் என பெருந்தொகையானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக சமூகத்தினரின் வாழ்வியல், கலாசாரம், சமூக உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் கண்காட்சிக்கூடங்கள் அமையப் பெற்றிருந்தன.
இக் கண்காட்சிக் கூடங்களில் சிற்பக் கலைகள், நவீன ஓவியங்கள், கைவினைப் பொருட்கள், ஒளி, ஒலி படைப்புகள், கதைகள், கட்டுரைகள் மற்றும் ஆவணப்படங்கள் முதலானவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வில் பிரதம அதிதி கல்முனை வடக்கு பிரதேச செயலாளர்அதிசயராஜ் கருத்து தெரிவிக்கையில், திட்டமிட்ட வகையில் அரசியல் நோக்கங்களுக்காக சமூகங்களுக்கு இடையில் முரண்பாடுகளை அவிழ்த்து விடுகின்ற செயற்பாட்டை தனிப்பட்ட ரீதியில் சமூகங்களுக்குள் சிலர் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இதன் மூலம் தனிப்பட்ட அரசியல் ஆதாயத்திற்காக, சமூகங்களை பிரித்தாளுகின்ற ஒரு செயற்பாட்டை முன்னெடுகின்ற விடயத்தில் மக்கள் தெளிவாக இருந்து இவ்வாறான முரண்பாடுகளை தோற்றுவிக்கும் முயற்சிகளை தோற்கடிக்க வேண்டும்.
மனித உள்ளங்களில் சமாதானத்தையும் அமைதியையும் உருவாக்குவதற்கும், விதைப்பதற்கும் நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.
அதுவே ஒட்டுமொத்த சமூகத்தின் மத்தியிலும் பிரதிபலிக்கக் கூடியதாக இந்த அபேதம் சமாதான கண்காட்சியின் மூலம் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *