கட்டாக்காலி மாடுகள் மீது கடும் நடவடிக்கை; சம்மாந்துறை பிரதேச சபை எச்சரிக்கை

அம்பாறை, சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலியாக அலைய விடப்பட்ட மாடுகள் காரணமாக அன்றாடம் வீதி விபத்துகள் அதிகரித்துள்ளதுடன், பொதுச்சொத்துகள் மற்றும் பெறுமதியான பயிர் வகைகளும் சேதமடைந்து வருவதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பிரதேச சபை தெரிவித்துள்ளது.
பொதுப்போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதிகளில் அலையும் மாடுகள் மக்களின் உயிர் மற்றும் சொத்துகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைக்கருத்திற்கொண்டு, கட்டாக்காலியாக மாடுகளை அலைய விடும் சொந்தக்காரர்கள் உடனடியாக அவற்றை தங்களது வீடுகள் அல்லது பண்ணைகளில் கட்டிப்பராமரிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது இறுதி அறிவித்தலாகுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரதேச சபையினால் பிடிக்கப்படும் ஒவ்வொரு மாட்டுக்கும் 10,000 ரூபா தண்டப்பணமும், ஒரு நாள் பராமரிப்புச்செலவாக 2,000 ரூபாவும் அறவிடப்படும். மூன்று நாட்களுக்குள் உரிய தண்டப்பணத்தைச் செலுத்தி மாடுகளை மீட்டுக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் அவை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு அரசுடமையாக்கப்பட்டு ஏலத்தில் விற்கப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்நாட்களுக்குள் நோய்வாய்ப்படும் அல்லது இறக்கும் மாடுகளுக்கு பிரதேச சபை பொறுப்பேற்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாடுகளின் சொந்தக்காரர்கள் தங்களது உரிமையை உறுதிப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட கிராம சேவகரின் உறுதிப்படுத்தலுடன் மாட்டுத்துண்டு (பண்ணைக்காட்) மற்றும் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகவலை மீறி தொடர்ந்தும் கட்டாக்காலியாக கால்நடைகளை அலைய விடும் பட்சத்தில், பிரதேச சபை சட்டத்தின் கீழ் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் நீதிமன்றத்தில் ஒப்படைத்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென மனவருத்தத்துடன் பிரதேச சபை அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *