முஸ்லிம் குடியிருப்பு பகுதிகளை ஒளியூட்டும் விசேட வேலைத்திட்டம்

நாவிதன்வெளி பிரதேச சபை கடந்த சபை அமர்வில் எடுத்த தீர்மானத்திற்கமைய, புனித ரமழான் நோன்பை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள முஸ்லிம் குடியிருப்பு பகுதிகளை ஒளியூட்டும் விசேட வேலைத்திட்டம் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் நளீரின் நெறிப்படுத்தலில் முன்னெடுக்கப்பட்டது.
இத்திட்டம் ரூபசாந்தன் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சாளம்பைக்கேணி 03 மற்றும் 04 ஆகிய பிரதேச மக்களின் ஆன்மீக உணர்வுகளை மதிக்கும் வகையிலும், இரவு நேர இபாதத் நடவடிக்கைகள் மற்றும் பள்ளிவாசல் செல்லும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலும் இவ்வொளியூட்டல் திட்டம் இன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பிரதேசத்தின் முக்கிய வீதிகள், பள்ளிவாசல் சுற்றுப்பகுதிகள் மற்றும் குடியிருப்பு தெருக்கள் உள்ளிட்ட இடங்களில் புதிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டதுடன், பழுதடைந்த விளக்குகள் சீரமைக்கப்பட்டன.
தவிசாளரின் பிரதிநிதியாக உப தவிசாளர் புவனரூபன் நேரில் களத்திற்கு சென்று பணிகளை கண்காணித்து, உரிய முறையில் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தினார். மேலும், மின் பணியாளர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.
இவ்வேலைத்திட்டம் நோன்பு காலம் முழுவதும் சிறப்பாக அமுல்படுத்தப்படுமென்றும், பொதுமக்கள் வழங்கும் கருத்துகள் மற்றும் தேவைகளின் அடிப்படையில் கூடுதல் வசதிகளும் ஏற்படுத்தப்படுமென்றும் பிரதேச சபை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நடவடிக்கை தொடர்பாக பிரதேச மக்களிடமிருந்து பாராட்டுகள் தெரிவிக்கப்படுவதுடன், சமூக நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *