இறக்காமம் பிரதேச செயலகத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வூட்டல்

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பை ஒரு தேசிய இயக்கமாக முன்னெடுக்கும் வகையில், “ரட்டம எகட்ட தேசிய செயற்பாட்டிற்கு” இணைந்த வகையில் “அகன்று செல்” எனும் தொனிப்பொருளில் விசேட விழிப்புணர்வு செயற்திட்டமானது போதைப் பொருள் முற்தடுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் றினோசாவின் நெறிப்படுத்தலின் கீழ் 03 ஆம் திகதி இறக்காமம் பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் றஸ்ஸான் (நளீமி) தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நாட்டில் பரவலாக உள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கத்துடன் “போதைப்பொருள் அற்ற நாடு மகிழ்ச்சியான நாளை” அகன்று செல் முழு நாடுமே ஒன்றாக” என்ற தொனிப்பொருளில் கீழ் “விஷ போதைப்பொருள் ஒழிப்பு வாரம் என பிரகடனப்படுத்தி ரட்டம எக்கட தேசிய செயற்பாட்டு சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் இந் நிகழ்விற்கு வளவாளராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் இணைப்பாளர் றசாட்  கலந்து உரையாற்றினார்.
மேலும் இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் அய்மா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஹம்சார், நிர்வாக உத்தியோகத்தர் றசாக், நிர்வாக கிராம உத்தியோகத்தர் குமார மற்றும் இறக்காமம் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இறக்காமம் பிரதேச செயலக சமூதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் காரியாலய ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியினைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளினால் முச்சக்கர வண்டிகள் மற்றும் பிற வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டி இத்திட்டத்தை தேசிய நிகழ்வை ஒட்டியதாக உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் போது, மூன்று மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் என்பன
பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டதுடன் இதில், போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள், போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் வழிமுறைகள், மேலும் சமூகத்தை போதைப் பொருட்களுக்கு எதிராக வலுப்படுத்தும் திட்டங்கள் உள்ளடக்கமாக இடம்பெற்றிருந்தன.
குறித்த நிகழ்வானது உளவளத் துணை உத்தியோகத்தர் றகீப் தொகுத்து வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *