அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது கடற்பகுதியில் ஆழ்கடல் மீன்பிடி படகு ஒன்று கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று(05) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், இயந்திரம் மற்றும் வலைகளுடன் கடலில் நங்கூரத்தில் இணைக்கப்பட்டு தரித்திருந்த பாரிய ஆழ்கடல் மீன்பிடி படகு ஒன்று திடீரென கடலில் மூழ்கியதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடற்கரையிலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் இந்த படகு மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தை அப்பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் முதலில் கவனித்து மற்றவர்களுக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, பொதுமக்களும் மீனவர்களும் இணைந்து படகை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடையதாகக் கூறப்படும் குறித்த படகை கனரக வாகனங்களின் உதவியுடன் கரைக்கு இழுத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், படகை மீட்கும் நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படையின் உதவியும் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சாய்ந்தமருது கடற்கரை பகுதியில் கடலரிப்பு அதிகரித்துள்ளதுடன், படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கான துறைமுக வசதிகள் இல்லாமை காரணமாக மீனவர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடலரிப்பினால் கடற்கரைப் பகுதியில் உள்ள தென்னை மரங்கள் கூட வேருடன் சாய்ந்து சேதமடைந்து காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும், கடற்கரைப் பகுதியில் மீன்பிடி உபகரணங்களை பாதுகாக்கும் வசதிகள் இல்லாமை மற்றும் கடலரிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் அவசியம் என அப்பகுதி மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

