76 ஓட்டங்களால் இலங்கை மகளிர் அணி தோல்வி

கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மகளிர் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இறுதிப் போட்டியில் ஏற்கனவே தகுதிபெற்றுக்கொண்ட இலங்கை மகளிர் அணி, இன்றைய கடைசி லீக் போட்டியில் தென் ஆபிரிக்க மகளிர் அணியிடம் 76 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.

மகளிர் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தனது முதல் 3 போட்டிகளில் தோல்விகளைத் தழுவிய தென் ஆபிரிக்க மகளிர் அணி, இன்று ஈட்டிய ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்பவுள்ளது.

இந்தப் போட்டியில் ஆன்ரி டேர்க்சன் குவித்த அபார சதம், க்ளொ ட்ரையோனின் சகலதுறை ஆட்டம் என்பன தென் ஆபிரிக்காவை இலகுவாக வெற்றி அடையச் செய்தன.

அணித் தலைவி லோரா வுல்வார்ட் (33), தஸ்மின் ப்றிட்ஸ் (38) ஆகிய இருவரும் 68 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், அதன் பின்னர் 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 6 விக்கெட்கள் சரிந்தன.

இந் நிலையில் ஆன்ரி டேர்க்சன், க்ளோ ட்ரையோன் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 112 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர்.

84 பந்துகளை எதிர்கொண்ட ஆன்ரி டேர்க்சன் 9 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 104 ஓட்டங்களைக் குவித்தார்.

தொடர்ந்து க்ளோ ட்ரையோன், நான் டி க்ளார்க் ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் 66 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கை 300 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.

க்ளோ ட்ரையோன் 51 பந்துகளில் 4 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 74 ஓட்டங்களையும் நாடின் டி க்ளார்க் 19 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் தெவ்மி விஹங்கா 43 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் சமரி அத்தபத்து 70 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

316 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 42.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 239 ஓட்டங்களைப் பெற்றது.

ஹாசினி பெரேரா (30), விஷ்மி குணரட்ன (24) ஆகிய இருவரும் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

அவர்கள் இருவரும் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்த பின்னர் உதவி அணித் தலைவி ஹர்ஷித்தா சமரவிக்ரம (33), அணித் தலைவி சமரி அத்தபத்து (52) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறிது நம்பிக்கையைக் கொடுத்தனர்.

ஆனால், மத்திய வரிசையில் அனுஷ்கா சஞ்சீவனி மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் 43 ஓட்டங்களைப் பெற்றார். வேறு எவரும் 20 ஓட்டங்களை நெருங்கவில்லை.

அணித் தலைவி ஹர்ஷித்தா சமரவிக்ரம் (33), அணித் தலைவி சமரி அத்தபத்து (52) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறிது நம்பிக்கையைக் கொடுத்தனர்.

ஆனால், மத்திய வரிசையில் அனுஷ்கா சஞ்சீவனி மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் 43 ஓட்டங்களைப் பெற்றார். வேறு எவரும் 20 ஓட்டங்களை நெருங்கவில்லை.

பந்துவீச்சில் க்ளோ ட்ரையோன் 34 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் அயாபொங்கா காக்கா 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *