மட்டக்களப்பு மாநகர சபையில் பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக பிரேரணை நிறைவேற்றம்

மட்டக்களப்பு மாநகர சபையில் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிரான மற்றும் சட்டவிரோதமாக பொது இடங்கள் மற்றும் வீதிகளில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள மதங்களுடைய சிலைகள் அகற்றகா கோரி தனிநபர் பிரேரணைகள் நேற்று(05) கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

 

 

மாநரசபையின் 8 வது சபையின் 11 பொதுக் கூட்டம் மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கிய நாதன் தலமையில் நேற்று சபா மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக கொண்டுவரவுள்ள அரசைப் பாதுகாக்கும் சட்டத்துக்கு எதிராக பந்து சின்னத்தில் சுயேட்சைக்குழுவில் போட்டியிட்டு உறுப்பினரான ஜெயா என்றழைக்கப்படும் சீனித்தம்பி ஜெயச்சந்திரகுமார்; தனிநபர் பிரேரணையைக் கொண்டுவந்தார்.

 

 

இந்த பிரேரணையை சபையில் முன்வைத்த அவர் 1979 ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் 48 ம் இலக்க பயங்கரவாத சட்டம் தற்காலிகமாகக் கொண்டு வந்து அது 1982ம் ஆண்டு நிரந்தர சட்டமாக மாறியது. இந்த சட்டம் 1989 வரை மாணவர் இயக்கங்களுக்கும் மக்கள் முன்னணிக்கும் எதிராக ஒரு சட்டமாக இருந்தது.

 

 

1983 ம் ஆண்டு தொடக்கம் 2009 வரை இடம்பெற்ற உள்நாட்டு போர் வரைக்கும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் 2019 ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் 2022 ம் ஆண்டு பிற்பகுதியில் அரக்கல போராட்டக்காரர்களுக்கும் எதிராக ஒரு முழுமையான ஒரு சட்டமாக 46 ஆண்டு காலமாக இருந்து வருகின்றது.

 

 

இருந்தபோதும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்கா இந்த சட்டத்தை இல்லாது ஒழிப்போம் என்று கூறினார். ஆனால் இன்று அவரால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தைதான் நிறுத்த முடிந்துள்ளது.

 

 

இவ்வாறு பல நல்ல காரியங்களைச் செய்தாலும் இதனைச் செய்யவில்லை. எனவே இந்த சட்டத்தை இல்லாமல் செய்ய வேண்டும் எனக் கோருகின்றேன்.

 

 

அதேவேளை 1979ம் ஆண்டு இந்த சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவரும் போது அன்று எதிர்காகட்சித் தலைவராக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் தலைவர் அமிர்தலிங்கம் தலைமையிலான 12 பாராளுமன்ற உறுப்பினர்களான தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்; ஆனால் இவர்கள் எதிர்த்து வாக்களிக்கவில்லை எதிர்த்து வாதாடவும் இல்லை அன்று இதனை இவர்கள் எதிர்த்திருந்தால் சர்வதேசம் மற்றும் இந்தியா ஆதரவு தந்திருக்கும். ஆனால் இவர்கள் மௌனித்து ஆதரவு வழங்கியுள்ளனர்.

 

 

இன்று 46 வருடத்துக்குப் பின்னர் நாங்கள் எதிர்க்க வேண்டியதாக இருக்கின்றது. எனவே இந்த சட்டத்தை எதிர்த்து வரவிடாமல் செய்ய அனைவரும் ஆதரவு வழங்குமாறு கோரியதையடுத்து தேசிய மக்கள் சத்தி உறுப்பினர்கள் நடுநிலையக இருப்பதாக அறிவித்ததுடன் ஏனைய உறுப்பினர்கள் இந்த பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து நிறைவேற்றினர்.

 

 

அதேவேளை தமிழரசுக் கட்சி உறுப்பினர் கருணாநிதி ஜனகன் மாநகர சபை எல்லைக்குள் உள்ள பொது இடங்கள் மற்றும் வீதிகளில் மதங்களுடைய சிலைகளை சட்டவிரோதமாக வைத்து வருவதால் பொதுமக்கள் வீதியால் பிரயாணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுவருவதுடன் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுவருகின்றன. எனவே சட்டவிரோதமாக பொது இடங்கள் வீதிகளில் வைக்கப்பட்டிருக்கும் மதங்களுடைய சிலைகளை சட்டரீதியாக அகற்றுமாறு கோரி பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்தார். அதனை ஏகோபித்து உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து அது நிறைவேற்றப்பட்டது.

 

 

அதேவேளை தமிழரசுக் கட்சி உறுப்பினர் துரைசிங்கம் மதன் கோரிக்கை ஒன்றை முன்வைத்து உரையாற்றுகையில் வளைகுடா யுத்தத்தையடுத்து எரிவாயுக்கான தட்டுபாடு எமது மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ளதுடன் எமது தாய்மார்கள் எரிவாயு (காஸ்)  இல்லாமல் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்றனர். இதற்குக் காரணம் இந்த மாவட்டத்துக்கு காத்தான்குடி மற்றும் பாலமுனை ஆகிய இரு பிரதேசங்களைச் சேர்ந்த இரு முகவர்கள் மட்டும் தான் இருப்பதுடன் அவர்கள் தமது சமூகம் சார்ந்து மட்டும் இந்த எரிவாயுக்களை விநியோகிக்கின்றனர்.

 

 

எனவே இவ்வாறான செயற்பாடு கண்டிக்கதக்கதுடன் இந்த எரிவாயுவான (காஸ்) விற்பனை முகவர்களை தமிழ் பகுதிகளில் விரிவுபடுத்தப்பட வேண்டும் என காஸ் கம்பனியிடம் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை சபை ஊடாக அந்த கம்பனிக்கு அறிவிக்கப்படும் என முதல்வர் தெரிவித்து சபை அமர்வுகள் பிற்பகல் 1.45 மணிக்கு நிறைவு பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *