நிந்தவூர் பிரதேச சபை தவிசாளராக சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவு

முன்னாள் தவிசாளரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமையை அடுத்து தவிசாளர் பதவி காலியாகியதையடுத்து புதிய தவிசாளரை தேர்வு செய்ய சபை கூட்டம் அழைக்கப்பட்டது.
ஆனால் முதல் இரு அமர்வுகளில் தவிசாளர் தேர்வு நடைபெறவில்லை. அந்த சந்தர்ப்பத்தில் சபை உறுப்பினர்கள் போதுமானதாக கலந்து கொள்ளாததால் கோரம் இல்லாமல் கூட்டம் நடைபெற்றது.
அதனால் தவிசாளரைத் தேர்வு செய்ய முடியவில்லை. பிரதேச சபையில் பல கட்சிகள் உறுப்பினர்களைக் கொண்டிருந்ததால், யார் தவிசாளராக வர வேண்டும் என்ற விவகாரத்தில் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை இல்லாமல் இருந்தது. இதனால் இரண்டு முறை தவிசாளர் தெரிவு இழுபறியாகியது.
தவிசாளர் இல்லாததால் சபையின் நிர்வாக நடவடிக்கைகள் சீராக நடைபெறவில்லை. குறிப்பாக 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் கூட முன்வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலை காரணமாக, தவிசாளர் தேர்வு நடைபெறும் வரை சில நிர்வாகப் பொறுப்புகளை அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதற்குப் பிறகே இறுதியாக இன்று நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு நடைபெற்றது.
இரு தடவைகள் இழுபறியில் நிலவிய நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்று(09) நடைபெற்றதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணி றியாஸ் ஆதம் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.
நிந்தவூர் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் அஸ்மி தலைமையில் நடைபெற்ற இத்தெரிவு நடவடிக்கையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 06 உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுலைமான் சாபி கலந்து கொண்ட நிலையில் கோரம் உருவாகி தவிசாளர் பதவிக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
முன்னதாக நடைபெற்ற இரண்டு அமர்வுகளிலும் பல்வேறு காரணங்களால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி சார்பிலான சபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமையால் தவிசாளர் தெரிவு இடம்பெறாமல் இழுபறி நிலை ஏற்பட்டிருந்தது. இதனால் பிரதேச சபையின் நிர்வாக நடவடிக்கைகள் தாமதமடைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற அமர்வில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான றியாஸ் ஆதம் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.
இன்றைய நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்ரப் தாஹீர் உட்பட மக்கள் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் சபைக்கு பிரசன்னமாகியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *