பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் 2019 ஆம் ஆண்டிற்கான திறந்த போட்டி பரீட்சையின் கீழ் 2025 ஆம் ஆண்டு இணைத்துக் கொள்ளப்பட்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான அறிமுக பயிற்சி நெறி நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் நடாத்துவதற்கு பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில் கிளிநொச்சி மாவட்ட செயலக பிரதேச செயலக மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு திணைக்களங்களில் கடமையாற்றும் 16 அலுவலர்களை உள்ளடக்கி குறித்த பயிற்சிநெறி நடாத்தப்பட்டிருந்தது.
இப் பயிற்சிநெறியினை நிறைவு செய்த அலுவலர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று(09) நடைபெற்றது.
இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், வளவாளர்கள் மற்றும் பயிற்சி இணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த பயிற்சி நெறியானது 20 இற்கும் மேற்பட்ட விடயப்பரப்புகளை உள்ளடக்கி 10 நாட்கள் கொண்ட பயிற்சி நெறியாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

