சட்டவிரோத கடலட்டை பண்ணையை அகற்றும் நடவடிக்கைக்கு பண்ணையாளர்கள் எதிர்ப்பு

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கிராஞ்சி கடலில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட கடலட்டை பண்ணையை அகற்றுவதற்காக தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபையின் வடமாகாண பணிப்பாளர் நிருபராஜ், பூநகரி பிரதேச செயலக காணி உத்தியோகத்தர், கிராமசேவையாளர், பொலிஸார் சென்ற போது அகற்ற விடாது கடலட்டை பண்ணையாளர்கள் தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
தமது வாழ்வாதாரமாக கடலட்டை பண்ணையை மேற்கொள்வதாகவும் உரிய அனுமதி பெறும் வரை அகற்ற வேண்டாம் என தெரிவித்து அகற்றவிடாது அதிகாரிகளை தடுத்தனர்.
தொடர்ந்து அதிகாரிகளுக்கும் பண்ணையாளர்களுக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதைத்தொடர்ந்து தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபை கடலட்டை பண்ணை அமைப்பதற்குரிய 122 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
122 பயனாளிகளின் பெயர் விபரங்களை எதிர்வரும் 20ம் திகதிக்கு முன்பு பிரதேச செயலகத்திடம் சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலக அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சட்டவிரோத கடலட்டை பண்ணையாளர்களும் சம்மதம் தெரிவித்ததைத்தொடர்ந்து அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
குறித்த கடலட்டை பண்ணையானது 2021ம் ஆண்டு காலப்பகுதி முதல் அமைக்கப்பட்டுள்ளது. பல முறை உரிய திணைக்களங்கள் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணையை அகற்றுமாறு தெரிவிக்கப்பட்ட போதும் அகற்றப்படாமையினால் அதனை அகற்றும் நோக்குடன் இன்று அதிகாரிகள் சென்றிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *