அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட இப்தார் நிகழ்வு நேற்று(11) நாவிதன்வெளி மன்சூர் கார்டனில் நடைபெற்றது.
இந்த நிகழ்வு சங்கத்தின் தலைவரும் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான நளீர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல கலந்து கொண்டார்.
மேலும் கல்முனை தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த களுஆராச்சி, சவளக்கடை பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கபூர், பொலிஸ் அதிகாரிகள், அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் சமூக நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் விசேட மார்க்க சொற்பொழிவை மத்திய முகாம் ஜும்மா பள்ளிவாசலின் பேஸ் இமாம் அஷ்ஷெய்க் றிபாஸ் (மஹாஷினி) நிகழ்த்தினார்.
நாவிதன்வெளி பிரதேசத்தில் அரிசி உற்பத்தி துறையை மேம்படுத்துவதிலும், விவசாயிகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவதிலும் சங்கம் தொடர்ந்து செயற்பட்டு வருவதாகவும், அதன் மூன்றாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இப்தார் நிகழ்வின் போது சமூக ஒற்றுமை மற்றும் விவசாயிகளின் முன்னேற்றம் குறித்து பலரும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், புனித ரமழான் மாதத்தின் ஆன்மீக முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.

