சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு கடந்த மார்ச் 08 ஆம் திகதி அக்கரைப்பற்று பகுதியில் பொதுச் சாலைகளை பயன்படுத்தும் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட வீதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட முஸ்லிம் பெண்களுக்கு விசேட விழிப்புணர்வு உரை அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல, பிரதேச செயலாளர்கள் மற்றும் உலமாக்களினால் நிகழ்த்தப்பட்டது.
பெண்களின் சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஊர்வலத்தில் பெருமளவான பெண்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது நிகழ்த்தப்பட்ட விழிப்புணர்வு உரையில், இலங்கை முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி மேசைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இவ்வுதவி மையங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு பாதுகாப்பும் ஆதரவும் வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான நேரங்களில் பெண்கள் இவ்வமைப்புகளை தயக்கமின்றி பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
மேலும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் இலங்கை பொலிஸ் சேவையில் இணைவதை ஊக்குவிக்க சமூகத்தினரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இளம் பெண்கள் பொலிஸ் சேவையில் இணைவதன் மூலம் சமூகத்துடனான பொலிஸ் உறவு வலுப்பெறும் மட்டுமன்றி, தங்களது சமூகத்திற்கு மேலும் சிறப்பாக சேவை செய்யும் வாய்ப்பும் கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்வு பெண்களின் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் சமூக பங்களிப்பை வலுப்படுத்தும் நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

