தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணக்கருவிலே நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் – எம்.பி ஸ்ரீநாத்

தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணக்கருவிலே நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் தெரிவித்தார்.

 

பொத்துவில் 60ம் கட்டை கனகர் கிராமத்தில் மீள்குடியேற்றத்திற்காக அமைக்கப்பட்ட வீடுகள் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த மண் மீட்பு போரிலே அன்பான நண்பர்களை எல்லாம் இழந்து இருக்கின்றோம். அந்த அடிப்படையிலே காலங்காலமாக வட கிழக்கு எங்கும் தமிழர் தாயக பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் பல காரணங்களால் தங்களுடைய நிலங்களை இழந்து உறவுகளை இழந்து விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றார்கள் அல்லது அதை விட்டுச் சென்று இருக்கின்றார்கள்.

 

இந்த அடிப்படையிலேயே இன்று இந்த கனகர் கிராமம் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்களை மீள்குடி அமர்த்துகின்ற இந்த நிகழ்வானது எங்களுக்கு மிகப்பெரிய ஒரு திருப்தியை தருகின்றது.

 

மக்கள் இழந்து போன நிலங்களை நாம் பெற்றுக் கொள்வதற்கான ஒரு அடிப்படையான பொறிமுறையிலே நாம் நுழைந்திருக்கின்றோம்.

 

உண்மையாக எங்களுடைய மக்கள் இந்த யுத்த காலத்திலே பல நெருக்கடிகளைக் கடந்தும் தங்களுடைய நிலங்களுக்காக தங்களுடைய வாழ்நாளை தங்களுடைய எதிர்பார்ப்புகளை விட்டு பயணித்திருக்கின்றார்கள்.

 

யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்பு கூட இந்த மீள் கட்டுமானம், மீள்குடியேற்றம் என்பது ஒரு எட்டா கனியான நிகழ்வாகவே இருந்திருக்கின்றது. அந்த வகையிலே இன்று இந்த அம்பாறை பிரதேசத்திலே கனகர் கிராமத்திலே ஆறு வீடுகள் நல் உள்ளம் கொண்ட புலம்பெயர் அமைப்புக்களின் நன்கொடையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

 

உண்மையிலேயே நான் இந்த விடயத்திலே அவர்களை மனதார பாராட்டுகின்றேன் வரவேற்கின்றேன். ஆனால் இந்த கிராமத்தின் மீள் கட்டமைப்பு முழுமையாக வெற்றி பெறுவதற்கு உண்மையாக எல்லோரும் ஒன்று பட்டு பயணிக்க வேண்டிய தேவையும் ஒன்றிணைந்த ஒரு திட்டமும் தேவைப்படுகின்றது.

 

நாம் இந்த குகாய் அமைப்பினூடாக ஒரு திட்ட முன் வரைபைக் கொண்டு வர வேண்டும் அந்த விடயத்திலே யார் யார் என்ன பங்காற்றுவது அந்த மீள் குடியேற்றத்தின் போது எதிர்கொள்கின்ற சவால்களை நாங்கள் எவ்வாறு வெற்றி கொள்வது என்பது பற்றி நாம் நீண்ட ஒரு திட்ட முனைப்புடன் பயணிக்க வேண்டி இருக்கின்றது உண்மையாக இழந்து போன நிலங்களை மீள் குடியேற்றம் என்ற அடிப்படையிலே மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முனைகின்ற பொழுது வருகின்ற இடையூறுகளை சட்டரீதியாக எங்களுடைய கிழக்கு மாகாண காணி முன்னாள் ஆணையாளர் சொல்வது போன்று எதிர் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டாலும் அதனோடு பங்கு பற்றி இதை வெற்றிகரமாக கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பும் எங்கள் அனைவருக்கும் இருக்கின்றது.

 

உண்மையில் இந்த மக்களின் அடிப்படையான தேவைகளை அறிந்து நாங்கள் இந்த வீடுகள் அமைத்து அவர்களுடைய அடிப்படையான விடயங்களை கொண்டு செல்வதற்கு இந்த பிரதேசத்தில் இருக்கின்ற விடயங்கள் மிக நுட்பமான முறையிலும் மிக ஒரு துணிச்சலான முறையிலும் எதிர்கொள்ள வேண்டி இருக்கின்றது. இந்த மக்களை உண்மையாக நாம் பாராட்ட வேண்டும். மிகுந்த மன உறுதியுடன் வளங்கள் அற்ற நிலையிலே அவர்கள் மீண்டும் இந்த பிரதேசத்திற்கு வந்திருக்கின்றார்கள். இன்றைய காலத்திலே தமிழ் சமூகம் எதிர்கொள்கின்ற மிகப்பெரிய நெருக்கடி தங்களுடைய இழந்து போன நிலங்களிலே மீள்குடியேற்ற வருகின்ற பொழுது வசதிகள் இல்லை என்ற காரணத்தினால் பல பேர் தயங்கி நிற்கின்றார்கள்.

 

எம்முடைய இனம் பாரிய அளவு இன விகிதாசாரத்தில் வீழ்ச்சி அடைந்து புலம் பெயர் நாடுகளிலும் பல மத்திய கிழக்கு நாடுகளிலும் இருக்கின்ற இந்த சூழ்நிலையிலே அவர்களை இன்று மீள் குடியேற்றுவது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது. ஏனென்றால் அங்கு உள்ள வசதிகள் வாய்ப்புகள் இருக்கின்ற பொழுது இவ்வாறான நெருக்கடிகளிலே காணியைப் பெற்றுக் கொள்வதில் இருந்து அடிப்படையான வசதிகளை பெற்றுக்கொள்வதில் இருக்கின்ற நெருக்கடியில் அவர்கள் வந்து இங்கு மீண்டும் மீள் குடியேறுவது என்பது சவாலான ஒரு விடயம். அந்த விடயத்திலே இந்த மக்கள் சகல விடயங்களையும் எதிர்கொண்டு நின்று இந்தப் பிரதேசத்திலே அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும் மீள்குடியேற வந்த உங்களை நான் உண்மையாக தமிழ் சமூகமத்தின் சார்பாக பாராட்டுகின்றேன்.

 

எங்களுடைய போராட்டம் என்பது உண்மையிலேயே 72 பேர் அல்லது 78 பேர் என்று அப்பால் 202 பேருக்கும் பெற்றுக் கொடுப்பதில் தான் உண்மையாக எங்களுடைய நிலம் மீட்பு என்பது ஒரு அளவாக திருத்திகரமான நிலையிலே மாறும்.

 

அதற்கு அப்பால் இந்த திட்ட அடிப்படையிலே இது ஒரு முற்று முழுதாக மீள் குடியேற்ற கிராமம் என்பதற்கு அப்பால் உண்மையிலேயே ஒரு வளம் பொருந்திய பிரதேசம்; விவசாயத்திற்கும் கடல் வளத்திக்கும் மிக ஒப்பான பிரதேசம் இதில் ஒரு நீண்ட கால எங்களுடைய திட்டமிடல் இருக்க வேண்டும். மீள் குடியேற்றம் மட்டுமல்லாது இந்த கிராமத்தை நாம் எவ்வாறு ஒரு அபிவிருத்தி நோக்கிய பணியிலே தன் நிறைவான கிராமமாக மாற்றுவதற்கு என்பதற்கான எங்களுடைய திட்ட வரைவு இருக்க வேண்டும். அதற்காக உண்மையிலேயே கடந்த காலத்திலே பல வகைகளிலுமே ஒத்துழைப்பு வழங்கிய அரசியல்வாதிகள் அதிகாரிகள் அந்த அடிப்படையிலேயே உங்களுடைய இந்த போராட்டத்திற்காக பங்கு பற்றிய மக்கள் அதனோடு இணைந்திருந்த அரசியல் தலைமைகள் இதற்காக ஒத்துழைத்த அதிகாரிகள் இதற்காக நல்லுள்ளம் கொண்டு பல விடயங்களிலேயே ஒத்துழைப்பையும் உதவிகளையும் வழங்கி வருகின்ற புலம்பெயர் சமூகம் எல்லோருக்கும் தமிழ் சமூகம் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

உண்மையிலேயே இன்று வட கிழக்கு எங்கும் பாரிய பிரச்சினைகள் இருக்கின்றன. பல திட்டங்கள் எங்களுடைய தவிசாளருடைய பங்கு முக்கியமான தேவையாக இருக்கின்றது. அவருடைய பேச்சிலேயே இந்த விடயம் மிகத் தெளிவாக தொனித்திருந்தது. குடிநீர் பிரச்சனையிலிருந்து காணி பிரச்சனையிலிருந்து பல விடயங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு இருக்கின்றது. கடந்த கால அரசாங்கங்களை ஊழல்கள் என்றும் பல விடயங்களிலேயே இனவாதங்கள் என்றும் ஓரங்கட்டி மக்கள் இன்று இந்த அரசாங்கத்தை பதவி ஏற்க செய்து இருக்கின்றார்கள். இந்த அரசாங்கத்திற்கு பாரிய பொறுப்பு இருக்கின்றது. இவ்வாறு இந்த பொத்துவில் பிரதேசம் சம்பந்தமாக குடிநீர் பிரச்சனை போன்று தான் நாங்கள் இந்த மட்டக்களப்பிலே பல திட்ட முன் வரைவுகளை அபிவிருத்தி சார் அரசியலிலே நாங்கள் ஒத்துழைப்புடன் இந்த அரசாங்கத்திற்கு பல விடயங்களிலே அபிவிருத்தியை கொண்டு செல்வதற்கான வேண்டுகோளை நாங்கள் விடுகின்றோம்.

 

எங்களுடைய இன பிரச்சனை என்ற விடயத்திற்கு அப்பால் ஒரு மிகப்பெரிய பாரிய புரையோடிப்போயுள்ள தீர்க்கப்படாத மக்களின் எதிர்பார்ப்புள்ள பிரச்சனையாக இருக்கின்ற பொழுதும் மக்களுடைய அடிப்படை வாழ்வாதாரங்களுக்காக பல விண்ணப்பங்களை நாங்கள் அரசாங்கத்திடம் எதிர்பார்க்கின்றோம் ஒன்றரை வருடங்களை கடந்து இருக்கின்ற பொழுதும் எங்களுக்கு பல விடயங்களிலே ஏமாற்றம் இருக்கின்றது. ஆனாலும் நம்பிக்கையோடு இந்த மக்களின் வடகிழக்கு பிரதேசத்தில் இருக்கின்ற தமிழ் பேசும் மக்களின் அடிப்படையான விடயங்கள் தீர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணக்கருவிலே நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.

 

பல விடயங்கள் இன்னும் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. அடிப்படையான விடயங்கள் விவசாய நிலங்கள், காணி சம்பந்தமான விடயங்கள், அபிவிருத்தி, விவசாய அபிவிருத்தி மற்றும் மீன்பிடி சம்பந்தமான விடயங்களை இந்த விடயங்களுக்கு இனப் பிரச்சனையை தீர்ப்பதற்கான போன்று சிக்கல் இல்லாத நிலைமைகள் கூட இவற்றுக்கான தீர்வுகள் இல்லை. பல இடங்களிலே திட்டமிட்ட வகையிலே தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக காணி ஆக்கிரமிப்புக்கள், வனஇலாகா திணைக்களத்தின் ஊடான பல காணி ஆக்கிரமிப்புகளை இந்த அரசாங்கம் மிக இலகுவாக தீர்த்துக் கொள்ள முடியும். ஆனால் அவற்றின் ஊடாக கூட பல இழுத்தடிப்புகள் இருக்கின்றன. ஆனாலும் நாங்கள் ஒன்று சேர்ந்து இந்த விடயங்களை எதிர்த்து இந்த மக்களுக்காக பெற்றுக் கொடுக்க வேண்டிய பாரி பொறுப்புடன் நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.

 

மிக முக்கியமாக இந்த கணக கிராமத்தை பொறுத்த அளவில் இதை அபிவிருத்தி செய்வதற்கான மீள் குடியேற்றத்தை முற்றுமுழுதாக செய்வதற்காக இந்த மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதற்காக நாம் இந்த பிரதேச சபையின் ஊடாக பல விண்ணப்பங்களை வைத்திருக்கின்றோம். இந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூடாக வைத்திருக்கின்றோம். இதற்கு அப்பால் இந்த மீள் குடியேற்றம் அமைச்சு என்பது இல்லாவிட்டாலும் கூட இப்போது வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் குடிநீர் விநியோகம் சார்ந்த அமைச்சின் ஊடாக நாங்கள் ஒன்றிணைந்து அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஒன்றிணைந்து பயணிக்க குரல் கொடுக்க தோளோடு தோல் நின்று உங்கள் உடன் பயணிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

 

அமைச்சரவை சார்பான கூட்டங்களிலே இந்த கணகர் கிராம விடயத்தை நாம் கையில் எடுத்து இவர்களுக்கான அடிப்படையான வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான இந்த அறிவுசார், புத்திஜீவிகள் மற்றும் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து இந்தத் திட்டத்தை மிக விரைவாக முன்னிலைப்படுத்துங்கள்.

 

அவற்றின் ஊடாக எங்கு எங்கு எந்த விடயங்களை முன்னிலைப்படுத்த வேண்டுமோ அந்தந்த இடங்களிலே அவற்றை முன்னிலைப்படுத்தி பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்கின்றோம்.

 

நாங்கள் கடந்த யுத்தத்திலே இன அழிப்பு என்று நாங்கள் நிறைய விடயங்களை நாம் முன்வைக்கின்றோம்.

 

ஆனால் எனது நண்பர்கள் கூறியது போன்று ஒரு மக்களின் அடிப்படையான நிலத்திலிருந்து அவர்கள் வாழ்வதற்குரிய அடிப்படை உரிமைகளை மறுக்கின்ற செயல் கூட ஒரு இன அழிப்பாகத்தான் பார்க்கப்படுகின்றது. கொள்ளப்படுகின்றது.

 

அந்த அடிப்படையிலேயே கனகர் கிராமத்திற்கு ஏற்பட்ட அவலம் மிகப்பெரியது. அந்த இனத்தை இந்தப் பிரதேசத்தில் இருந்து வெளியேற்றுவதற்கான நிகழ்வானது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் இந்த விடயத்திலே இன்று அதிகாரிகள் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து இந்த மக்களின் மீள் எழுச்சிக்காக மீள் குடியேற்றத்திற்காக குரல் கொடுக்கின்ற விடயத்தை பார்க்கின்ற பொழுது மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது. இந்த இலக்கிலே நாம் வெற்றி அடைவதற்கான பயணத்தில் காலடி எடுத்து வைத்திருக்கின்றோம் ஒரு குறுகிய கால திட்ட முன்வரைபுடன் நாங்கள் நீண்ட காலம் அல்லாது ஐந்து வருட காலத்திலே இந்த கிராமத்தை முற்று முழுதாக எவ்வாறு ஒரு மீள் எழுச்சிமுள்ள அபிவிருத்திப் பணியை நோக்கிய ஒரு வாழ்வாதாரத்தில் சிறந்த கிராமமாக மாற்றுவதற்கு என்ற திட்டத்தை நாங்கள் ஒரு இயங்கு நிலைக்கு கொண்டு வருவதற்கான செயற்பாடுகளை ஆரம்பிப்போம். அதற்கான செயல்பாடுகளை உங்களுடைய எல்லாருடைய ஒத்துழைப்புக்களுடனும் மிக முக்கியமாக இங்கு வாழ்கின்ற மக்கள் எவ்வளவோ யுத்த நெருக்கடிகளை இழப்புகளை கண்டும் அவற்றிலிருந்து மீண்டெழுகின்ற இனமாக இருக்கின்றோம். அந்த வகையிலே இந்தப் பிரதேச மக்கள் நீங்கள் உறுதியுடன் ஒரு அணியிலேயே திரண்டு நின்று ஒற்றுமையாக செயல்படுகின்ற பொழுது இந்த வெற்றி நோக்கிய இலக்கை பயணிக்கலாம்.

 

இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான விடயங்களை பயணிக்கின்ற பொழுதுதான் ஆழமான உணர்வுகளையும் நாம் அரசியலுக்கு வந்த விடயங்களையும் நாம் பயணிக்க வேண்டிய பொறுப்புகளை உணர்த்துகின்ற நிகழ்வாக இந்த விடயங்கள் இருக்கின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *