தற்போது தனியார் கையில் நெடுந்தீவுக்கான படகுச்சேவை

நெடுந்தீவுக்கான கடற் போக்குவரத்து கடந்த 03ஆம் திகதி தொடக்கம் தனியார் கையில் வந்துள்ளதுடன் தொடர்ந்தும் இவ்வாறான நிலையே தொடர்கின்றது.

நெடுந்தீவு – குறிகட்டுவான்  இடையேயான சேவையில் ஈடுபடும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறுப்பிலுள்ள படகுகளில் ஒன்றான குமுதினி படகு திருத்தவேலை காரணமாக சேவையில் இல்லை.

இதேவேளை வடதாரகை திருத்த வேலைக்காக திருகோணமலையில், நெடுந்தாரகை திருத்தவேலைக்காக நெடுந்தீவில் என பயணிகள் சேவையில் இருந்து முற்றாக அரச படகுகள் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டு தீவு மக்களை தவிக்கவிட்டுள்ளனர்.

தனியார் படகான கரிகணன் படகே தற்போது பயணிகள் சேவையில் இணைந்து கொண்டதுடன் இதன்காரணமாக வழமையான அதன் மு.ப 11.30 மணி சேவையினை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பண்டிகைக்காலம் நெருங்கிவரும் நிலையில் மு.ப. 11.30 மணி சேவை நிறுத்தப்பட்டதால் உள்ளூர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

படகு சேவைகள் தொடர்பாக உரிய திட்டமிடல் இன்றி வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் செயற்பட்டு வருவதுடன் பயணிகள் சேவைக்காக மாற்று ஏற்பாடுகள் செய்வது தொடர்பிலும் அக்கறை இன்றி இருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *