அதிகரித்துவரும் வெப்பம்; யாழ் போதனா மருத்துவமனையின் நிபுணர் எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவிவரும் கடுமையான வெப்பமான காலநிலை காரணமாக கண்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் முறைகள் குறித்து யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் கண் மருத்துவ நிபுணர் எம். மலரவன் இன்று (18) ஊடகங்களுக்கு விசேட விளக்கமளித்தார்.

 

வளியில் அதிகரித்துக் காணப்படும் புற ஊதாக் கதிர்களின் (UV Rays) தாக்கம் அதிகமாக இருப்பதால், காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் நடமாடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

வெப்பத்தினால் உடலில் நீர்ச்சத்து குறைவதைத் தடுக்க, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதிய அளவு நீர் அருந்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.

 

கண்களில் ஈரப்பதம் குறைந்து வறட்சி ஏற்படுவதைத் தவிர்க்க, மருத்துவரின் ஆலோசனையுடன் செயற்கைக் கண்ணீர் (Artificial Tears) துளிகளைப் பயன்படுத்தலாம்.

 

வெளியில் செல்லும் போது சூரிய ஒளியிலிருந்து கண்களைப் பாதுகாக்க தலைக்கவசம் அல்லது தொப்பி அணிதல்.தரமான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சூரியக் கண்ணாடி (Sunglasses) அணிதல் உள்ளிட்ட விடயங்களை மருத்துவ நிபுணர் வலியுறுத்தியுள்ளார்.

 

கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டு கழுவுதல் தேவையற்ற முறையில் கண்களைத் தொடுவதையோ அல்லது கண்களைக் கசக்குவதையோ முற்றாகத் தவிர்க்க வேண்டும்.

 

தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் கண் நோய்கள் குறித்த தேவையற்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.

 

தற்போதைய நிலையில் விழிப்புணர்வுடன் இருப்பது போதுமானது என்றும், கண்களில் கடுமையான பாதிப்பு தென்பட்டால் மாத்திரம் உடனடியாக மருத்துவமனை அல்லது சிகிச்சை நிலையங்களை நாடுமாறும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *