பழங்குடி மக்களின் வாழ்வியலைப் பேசும் ‘படையல்’ காண்பியக் கலைக்காட்சி

ஓவியக் கலைஞர் தங்கேஸ்வரன் விக்னேஸ்வரனின் ‘படையல்’ எனும் பழங்குடி மக்களின் வாழ்வியலைப் பேசும் காண்பியக் கலைக்காட்சி இம்மாதம் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு புதிய வீதியில் அமைந்துள்ள கூடம் கலையகத்தில், நடைபெறவுள்ளது.

 

‘மூன்றாவதுகண்’ உள்ளூர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழு மற்றும் ‘வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள்’ குழு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

மட்டக்களப்பைப் பூர்வீகமாகக் கொண்ட பழங்குடி இனக்குழுமத்தைச் சேர்ந்த த.விக்னேஸ்வரன், தனது கலைப் படைப்புகள் ஊடாகத் தனது சமூகத்தின் தனித்துவமான பண்பாடுகளையும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் பொதுவெளியில் காட்சிப்படுத்தவுள்ளார்.

 

பழங்குடி இனத்தைச் சாராதவர்களே இதுவரை அந்த இனக்குழுமம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில், அந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு கலைஞரே தனது மக்களின் வரலாற்றையும், வாழ்வியலையும் கலையினூடாக வெளிப்படுத்துவது ஒரு முன்னோடியான முயற்சியாகக் கருதப்படுகிறது.

 

அதற்கமைவாக எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 9 மணிக்குத் ஆரம்பிக்கும் இக்கண்காட்சி, எதிர்வரும் மூன்று தினங்களுக்கு இரவு 7 மணி வரை பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும். ஆரம்ப நிகழ்வாக பழங்குடி மக்களின் பாரம்பரிய வாழ்த்துப் பாடல் மற்றும் கொட்டுப் பறையிசையுடன் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.

 

இதன்போது த.விக்னேஸ்வரன் எழுதிய ‘உத்தியாக்கள்’ எனும் கவிதை நூல் வெளியீடு, படையல் காண்பியப் படைப்பாக்கப் பகிர்வு என்ற தலைப்பில் விசேட கலந்துரையாடல் போன்றன இடம்பெறவுள்ளது. இதில் கலைஞர்களான கமலாவாசுகி, சு.நிர்மலவாசன் மற்றும் சசிரேகா ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கவுள்ளனர்.

 

பழங்குடி மக்களின் சடங்குகளை முன்னின்று நடத்தும் மூத்த ஆளுமைகள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்வு, மட்டக்களப்பின் கலை வரலாற்றில் ஒரு முக்கிய பதிவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *