கிளிநொச்சியில் ‘வேர்க்கடலை பிஸ்கட்’ அறிமுக நிகழ்வு

விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் கிளிநொச்சியில் உருவாக்கப்பட்ட ‘2கே அக்ரோ புரொடக்ட்ஸ் லிமிடெட்’ (2K Agro Products Ltd) நிறுவனத்தின் புதிய உற்பத்திப் பொருளான ‘வேர்க்கடலை பிஸ்கட்’ அறிமுக நிகழ்வு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் விசேட பங்கேற்புடன் இன்று (21.04.2026) செவ்வாய்க்கிழமை காலை அந்நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.

 

 

விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட 17 பட்டியலிடப்படாத பொதுக் கம்பனிகளில் ஒன்றான இந்நிறுவனம், தனது பங்குதாரர்களாக உள்ள 325 விவசாயிகளிடமிருந்தும், மேலதிகமாக வேறு 200 விவசாயிகளிடமிருந்தும் நிலக்கடலையைக் கொள்வனவு செய்து வருகின்றது. இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் நிலக்கடலையைப் பெறுமதி சேர் முடிவுப் பொருளாக மாற்றிச் சந்தைப்படுத்தும் நடவடிக்கைகளை இந்நிறுவனம் தற்போது முன்னெடுத்துள்ளது. இதன் ஓர் அங்கமாகவே ‘வேர்கடலை பிஸ்கட்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் கச்சான் பாகுவையும் சந்தைக்கு அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 

 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள், விவசாய உற்பத்திகளை வெறுமனே மூலப்பொருட்களாக விற்பனை செய்யாமல், இவ்வாறான பெறுமதி சேர் முடிவுப் பொருட்களாக மாற்றி விற்பனை செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகளைப் பெரிதும் வரவேற்றார். அத்துடன், ‘யாழ்ப்பாணத்திலிருந்து வெளிநாடுகளுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த நடைமுறை சாத்தியமானதும், இவ்வாறான உள்ளூர் உற்பத்திப் பொருட்களையும் சர்வதேச ஏற்றுமதித் தரத்துக்குப் பொதியிட்டு வெளிநாடுகளுக்கு நேரடியாக அனுப்ப முடியும்’ என நம்பிக்கை வெளியிட்டார்.

 

 

இதன்போது நிறுவனத்தின் பங்காளர்களாக உள்ள விவசாயிகள் பல்வேறு சவால்களை ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். குறிப்பாக, விவசாயப் பயிர்களுக்குக் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகளால் ஏற்படும் சேதங்கள், உற்பத்திச் செலவைக்கூட ஈடுசெய்ய முடியாதளவுக்குக் குறைந்த விலையில் விளைபொருட்களை விற்க வேண்டிய நிர்ப்பந்தம் மற்றும் இயற்கை பசளைகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்குச் சந்தையில் உரிய தனித்துவமும் விலையும் கிடைக்காமை ஆகிய பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டினர்.

 

 

விவசாயிகளின் கருத்துக்களுக்குப் பதிலளித்த கௌரவ ஆளுநர், விளைபொருட்களின் விலைத்தளம்பலைக் கட்டுப்படுத்துவதற்கு விவசாயப் பருவகால நாட்காட்டியொன்று  உருவாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும். இதற்கான தகவல் திரட்டுப் பொறிமுறையை ஏற்படுத்துவது தொடர்பில் பல்கலைக்கழகங்களுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் எவ்வளவு உற்பத்தி செய்தாலும், அவற்றைக் கொள்வனவு செய்து இவ்வாறான பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றும் நிறுவனங்கள் தொடர்ச்சியாகவும் சிறப்பாகவும் இயங்குமாயின் விவசாயிகளின் பல பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிட்டும், எனத் தெரிவித்தார்.

 

 

நிகழ்வின் நிறைவாக, நிறுவனத்தின் இயந்திரத் தொகுதிகளையும் அதன் தயாரிப்புச் செயற்பாடுகளையும் கௌரவ ஆளுநர் உள்ளிட்ட அதிதிகள் நேரில் பார்வையிட்டனர்.

 

 

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன், கிளிநொச்சி பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் சோதிலட்சுமி, பிராந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் மேலதிக பணிப்பாளர் ராஜேஷ; கண்ணா உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள், நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *