மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு சுடர் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழா நேற்று(26) பிற்பகல் கழக மைதானத்தில் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் அதிதிகள் பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டு தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், இறை வணக்கம் மற்றும் கழகத்தின் ‘சுடர் கீதம்’ இசைக்கப்பட்டு நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அடுத்து ஆசியுரை, வரவேற்புரை மற்றும் தலைமையுரைகளைத் தொடர்ந்து தமிழர் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையிலான பல்வேறு கலாசார விளையாட்டுப் போட்டிகள் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றன.
இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
போட்டிகளின் முடிவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெறுமதியான பரிசில்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வின் இறுதியில் அதிதிகள் உரை, நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுபெற்றது.
இந் நிகழ்வில் முதன்மை அதிதிகளாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இளையதம்பி சிறிநாத், ஞானமுத்து சிறிநேசன், இரா.சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் அதிதிகளாக மண்முனை பிரதேச சபைத் தவிசாளர், மண்முனை பிரதேச சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், ஆலய நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், கழக உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊர் பிரமுகர்கள், நலன் விரும்பிகள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் இவ்விழாவில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

