காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் விழிப்புணர்வு வேலைத்திட்டம்

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு வேலைத்திட்டம் இன்று மாலை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் திறன் விருத்தி நிலையத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் விசேட அதிதியாக உரையாற்றிய ஆளுநர் வேதநாயகன், “காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தை அரச திணைக்களங்களின் ஆவணங்களில் உறங்கும் சாதாரண விடயமாக பார்க்க முடியாது. இது பல குடும்பங்களின் கண்ணீருடனும், தசாப்தங்களாக நீளும் எதிர்பார்ப்புடனும் சம்பந்தப்பட்ட அதிஉணர்வுப்பூர்வமான மனிதாபிமானப் பிரச்சினை” எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த, ‘சூம்’ தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்து வரவேற்புரையாற்றியதுடன், விழிப்புணர்வு வேலைத்திட்டத்தின் நோக்கம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கமளித்தார்.

மேலும், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அனுப்பி வைத்திருந்த விசேட செய்தியும் உத்தியோகபூர்வமாக வாசிக்கப்பட்டது.

காணாமல் போன ஆட்கள் தொடர்பான கோவைகளின் முன்னேற்றங்களை இற்றைப்படுத்துதல் மற்றும் புதிய கொள்கைக் கட்டமைப்பு தொடர்பாக அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டுதல் என்பன இக்கூட்டத்தின் பிரதான நோக்கங்களாக அமைந்திருந்தன.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சத்தியசீலன், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், அதிகாரிகள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *