சமூக பொருளாதார அரசியற் பண்பாட்டு நீதிக்காய் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான திறந்த கலந்துரையாடல்

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், இணைந்து ஏற்பாடு செய்திருந்த சமூக பொருளாதார அரசியற் பண்பாட்டு நீதிக்காய் மக்கள் பிரதிநிதிகளை அணுகல் எனும் கருப் பொருளின்கீழ் மக்களுடனான திறந்த கலந்துரையாடல் இன்று(10) மட்டக்களப்பு கல்லடியிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.

 

 

 

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித் திட்டத் தலைவர் இந்துமதி ஹரிகரதாமோதரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன், இளையதம்பி சிறிநாத், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

சட்ட உருவாக்கம் மற்றும் கொள்கை மாற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடலை சட்டத்தரணி குகதாசன் ஐங்கரனின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது. பெண்கள் நுண்கடன்களால் எதிர்கொள்ளும் சவால்களும் சட்ட ஏற்பாடுகளிலுள்ள பாதுகாப்பின்மை தொடர்பாக தனது அனுபவங்களை மட்டக்களப்பு மாவட்ட அமரா பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் ஒன்றியத்தின் சார்பாக மதனா பாலகிருஷ்ணராஜா பகிர்ந்து கொண்டார்.

 

 

 

பெண்களுக்கெதிரான பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைத் தீர்ப்பதற்கான சட்ட வழிமுறைகளில் மட்டுப்படுத்தல்கள், அரசினைப் பாதுகாக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம், மக்கள் பிரதிநிதிகளின் தொடர் செயற்பாடுகளும் தொடர்பான திறந்த கலந்துரையாடல்கள் நடைபெற்றர.

 

 

 

மாதவிடாய்சார் பாராபட்ச நிலைமைகளும் அரச கொள்கைகளின் அமுலாக்கமின்மையும் தொடர்பாக விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித் திட்டத் தலைவர் இந்துமதி ஹரிகரதாமோதரன் தெளிவூட்டல் வழங்கியதோடு, சமுதாயத்தில் அடையாளப்படுத்தப்பட்ட சமகால சமூகப் பொருளாதார அரசியற் பண்பாட்டுப் பிரச்சனைகள் மற்றும் இடைவெளிகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் சமகால பொருளாதார நெருக்கடிகளும் அவர்களின் கோரிக்கைகளும், மக்கள் எதிர்கொள்ளும் காணிப்பிரச்சினைகள் மற்றும் வீட்டுத் திட்டம் தொடர்பான சவால்களும் உடனடி நடவடிக்கைகளும், நிலைமாறுகால நீதிச் செயன்முறைப் பொறிமுறைகளின் செயற்பாடின்மையும் மக்களுக்கான நீதி புறக்கணிக்கப்படலும் தொடர்பான கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.

 

வாகரைப் பிரதேச மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக ஆசிரியர் கணேசமூர்த்தி விக்கிரம்சிங்கன் இதன்போது விளக்கினார்.

 

 

 

மக்கள் சேவை அணுகலில் மொழியுரிமை மீறப்படலும் மக்கள் எதிர்கொள்ளும் நாளாந்த சவால்கள், போதைப்பொருள் பாவனை ஏற்படுத்தும் சமூக, பொருளாதார அரசியற், பண்பாட்டு நெருக்கீடுகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

 

 

 

இங்கு கலந்து கொண்ட மக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு இதன்போது பிரசன்னமாகியிருந்த 3 பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களுக்கு பதில்களை வழங்கியதோடு, தெளிவூட்டல்களையும், மக்களின் கோரிக்கைகளை தமக்கு எழுத்து மூலம் முன்வைக்குமாறும் அவற்றுக்கு உரிய அதிகாரிகள், அமைச்சர்களினதும் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வுகளைப் பெறுவதற்கு தாம் முன்னிப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்ததோடு, கொள்கைகளில் மாற்றம், சட்ட உருவாக்கம், தொடர்பிலும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *