அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்பில் தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் விஜயுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் மாற்றத்தை விரும்பிய மக்களே விஜயை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும், அவருக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும், இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட இழுவைமடி படகுகள் மூலம் மீன்பிடியில் ஈடுபடுவது இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் நாட்டின் இறையாண்மையையும் பாதிப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அதனால் சட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் தமிழ்நாடு தரப்புடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசுக்கு எதிராக பிரசாரம் செய்து வருவதாகவும், நிலக்கரி விவகாரம் உள்ளிட்ட பல விடயங்களில் அவர்கள் முன்வைத்த கருத்துகளில் உண்மைத்தன்மை இல்லை என்றும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.

