மலையகத்தின் ஹப்புத்தளை நகரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இன்று (16) அதிகாலை முதல் கடும் பனிமூட்டத்துடனான காலநிலை நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஹப்புத்தளை – பெரகல பிரதான வீதி உட்பட பல பகுதிகளில் வீதிகள் மற்றும் சூழலை தெளிவாகக் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வீதித் தெளிவற்ற தன்மை காரணமாக, வாகன சாரதிகள் தங்களது மின்விளக்குகளை ஒளிரவிட்டவாறு, மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்தி வருகின்றனர்.
மலைப்பாங்கான மற்றும் வளைவுகள் நிறைந்த இப்பகுதிகளில் பயணிக்கும் போது வாகனங்களை கட்டுப்பாடான வேகத்தில் இயக்குமாறு சாரதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விபத்துக்களைத் தவிர்க்கும் பொருட்டு, முற்பகலிலும் போதிய முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு சாரதிகள் மற்றும் பாதசாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

