சீதனக் கொடுமையால் இளம் பெண் உயிரிழப்பு; யாழ்ப்பாணத்தில் சோகம்

யாழ்ப்பாணம் – நாவாந்துறையைச் சேர்ந்த 19 வயதுடைய இளம் பெண் ஒருவர் சீதனக் கொடுமையால் மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர் ஜெயச்சந்திரன் ஜென்ஸி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த இளம் பெண் கடந்த இரண்டு வருடங்களாகக் காதலித்து வந்த நிலையில், நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்த திருமணத்தை கணவரின் தாயார் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் பொருளாதார ரீதியில் நலிவுற்ற நிலையிலிருந்த போதிலும், 25 பவுண் தங்க நகையும், வீடும் சீதனமாக வழங்குமாறு கணவரின் தாயார் தொடர்ந்து வற்புறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கணவரை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, அதற்கு பெண் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, தனது தாயார் கேட்ட சீதனத்தை வழங்காவிட்டால் வெளிநாடு சென்றுவிடுவேன் என கணவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான இளம் பெண் நேற்றைய தினம் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *