ஒரே இரவில் 4 கடைகள் உடைப்பு; கொள்ளையனை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

மட்டக்களப்பு சிறுவர் பூங்காவிற்கு முன்பாக அமைந்துள்ள ‘Tomorrow Fashion’, ‘J R Tech’ உள்ளிட்ட அடுத்தடுத்த நான்கு கடைகள் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் கொள்ளையர்களால் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடைகளின் பூட்டுக்களை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்த பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இக்கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. அந்தக் காட்சிகளின் அடிப்படையில், படத்தில் காணப்படும் நபரே இந்தத் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என பலத்த சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நபர் இதற்கு முன்னர் கதுறுவெல பகுதியில் இடம்பெற்ற இதேபோன்ற நான்கு கடைகள் உடைப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடனும் தொடர்புடையவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, சந்தேக நபரைப் பற்றிய ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்களுக்கோ அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, வியாபாரிகள் இரவு நேரங்களில் தங்களது கடைகளின் பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் அவதானத்துடன் செயல்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *