சீனாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஷாங்சி மாகாணத்தின் லியுஷென்யு நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட பாரிய வாயு வெடிப்பு விபத்தில் இதுவரை 90 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து இடம்பெற்ற வேளையில் சுமார் 247 தொழிலாளர்கள் நிலத்தடியில் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. கார்பன் மோனாக்சைடு அளவு அதிகரித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட இந்த பயங்கர வெடிப்பில் பலர் சிக்கியுள்ளனர்.
மேலும், 120-க்கும் மேற்பட்டோர் பல்வேறு காயங்களுடனும் நச்சு வாயு தாக்கத்தினாலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து, 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் சீனாவில் இடம்பெற்ற மிக மோசமான சுரங்க விபத்துகளில் ஒன்றாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
சம்பவத்தைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மீட்புப் படையினர் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சுரங்க நிர்வாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

