10 வேடங்களில் கலக்க வரும் யோகி பாபு – புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வைரல்

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான யோகி பாபு தற்போது புதிய படமொன்றில் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெய் நடித்த ‘சட்டென்று மாறுது வானிலை’ திரைப்படத்தில் நடித்திருந்த யோகி பாபு, அதனைத் தொடர்ந்து இயக்குநர் ஆர். கிஷோர் குமார் எழுதி இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் முதல் முறையாக யோகி பாபு பத்து வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இன்று வெளியிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது. அதில், யோகி பாபு உளவாளி தோற்றத்தில், மிலனில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் முன்பாக நிற்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

மேலும், இந்தப் படத்தில் ரெடின் கிங்ஸ்லி மற்றும் விடிவி கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 9 Lights Productions தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, யோகி பாபு ஏற்கவுள்ள பத்து கதாபாத்திரங்கள், படத்தின் முழு கதைக்களம் மற்றும் வெளியீட்டு திகதி உள்ளிட்ட தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

முன்னதாக, இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கிய சமூக நையாண்டி திரைப்படமான ‘கெணத்த காணோம்’ படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்திருந்தார். தற்போது அவரின் கைவசம் ஜெயிலர் 2, ராக்கா மற்றும் ஆன் ஆர்டினரி மேன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *