கொழும்பில் ஒருவரை கடத்தி சுமார் 2 கிலோ தங்கத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக, மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் (சப் இன்ஸ்பெக்டர்) ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், களனியில் நடைபெற்று வந்த பொலிஸ் பயிற்சி பாடநெறியில் கலந்து கொண்டிருந்த நிலையில் (20) கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக 2023 மார்ச் 18ஆம் திகதி கொழும்பு வடக்கு குற்ற விசாரணைப் பிரிவில் ஒருவர் கடத்தப்பட்டு, 2 கிலோ தங்கம் கொள்ளையிடப்பட்டதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
பின்னர் அவர் களனி பொலிஸ் பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் இருந்தபோது, தொடர்ந்த விசாரணைகளின் அடிப்படையில் CID அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அவரை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

