வடக்கு மாகாணத்துக்கு இரு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புப் பிரதி அமைச்சர், இராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவினர், நேற்று மன்னார் மாவட்டத்தில் கள ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, இன்று(26) கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலும் களப்பயணம் மேற்கொண்டு காணி விடுவிப்புத் தொடர்பான நேரடி ஆய்வுகளை முன்னெடுத்தனர்.
இந்த ஆய்வுகளின் பின்னர், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் காணி விடுவிப்புத் தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் அமைச்சருமான சந்திரசேகர், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் மற்றும் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி, யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி உள்ளிட்ட இராணுவ உயர் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

