ரோட்டரி கழகத்தின் உலகளாவிய கொள்கையான “தன்னலமற்ற சேவை” என்பதற்கிணங்க, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக முன்னேற்றத்தை நோக்காகக் கொண்டு, Rotary Club of Batticaloa Heritage அமைப்பினால் மாணவர்களுக்கான விசேட உளநல மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டமொன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
“மாணவர்களை உளவளத்தின் மூலம் வலுப்படுத்துதல்” என்ற தலைப்பிலான இந்த இரு நாள் விழிப்புணர்வு மற்றும் பயிற்சிப் பட்டறை, கடந்த 2026 மே 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் களுவங்கேணி விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
மாணவர்களின் உணர்ச்சி நிலைத்தன்மை (Emotional Stability), தன்னம்பிக்கை மற்றும் நேர்மறை மனநலத்தை (Positive Mental Health) மேம்படுத்துவதை முதன்மையாகக் கொண்டு இவ்வமர்வுகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
வெறும் விரிவுரைகளாக மாத்திரம் இந்த செயலமர்வு அமையாமல், மாணவர்களைக் கவரும் வகையிலான குழுச் செயற்பாடுகள், கலந்துரையாடல்கள் மற்றும் விழிப்புணர்வு அமர்வுகள் இதில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கல்வியாளர்கள் மற்றும் மனநல நிபுணர்கள் (Mental Health Professionals) பலரால் இந்த அமர்வுகள் மிகவும் காத்திரமான முறையில் வழிநடத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து குறித்த செயலமர்வில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கல்வி, சுகாதாரம் மற்றும் மனிதநேய சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்களது அர்த்தமுள்ள பங்களிப்புகளை வழங்கிவரும் Rotary Club of Batticaloa Heritage, இத்திட்டத்தின் மூலம் மட்டக்களப்பு மாவட்ட மாணவர் சமூகத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கான தங்களின் அர்ப்பணிப்பை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


