மட்டக்களப்பு – மண்முனைப் பற்று (ஆரையம்பதி) பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று(03) பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஷின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான பிரபுவின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள், அபிவிருத்தித் திட்டங்கள், கல்வி, சுகாதாரம், வீதி,போக்குவரத்து பேரூந்து, காணி, உபதபால் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் கல்வித் துறையில் காணப்படும் குறைபாடுகள், பாடசாலைகளின் அடிப்படைத் தேவைகள், மாணவர்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் கல்வி வளங்களை மேம்படுத்துதல் தொடர்பான பல முக்கிய விடயங்களை சுட்டிக்காட்டி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
அத்துடன், சட்டவிரோத முறையில் தயாரிக்கப்படும் கசிப்பு தொடர்பாகவும் ஒவ்வொரு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் பொலிஸாருக்கு அறிவுறுத்தி வருவதாக தெரிவித்த அவர், இக்கூட்டத்திலும் கசிப்பை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தினார்.
மேலும், பேரூந்து சாரதி பற்றாக்குறை தொடர்பாகவும் அதற்கு மேலதிக சாரதிகள் இணைக்க வேண்டும் என பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பிரபுவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ. ஹீஸ்புல்லா, இரா.சாணக்கியன், வைத்தியர் இ.சிறிநாத் மற்றும் மண்முனைப் பற்று பிரதேச சபை தவிசாளர் செந்தில்குமார் எனப் பலரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களையும் பிரதேச மக்களின் தேவைகள் தொடர்பான விடயங்களையும் முன்வைத்தனர்.

