யாழில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி ஆரம்பம்

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி இன்று (09) காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.

 

இந் நிகழ்வில் தேசிய கல்வியியற் கல்லூரியின் ஓய்வுநிலை விரிவுரையாளரும் சுன்னாகம் “வாழ்வகம்” விழிப்புல வலுவிழந்தோர் இல்லத் தலைவருமான ஆறுமுகம் ரவீந்திரன் கலந்து கொண்டார்.

 

சிறப்புவிருந்தினராக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர் திருமதி. ருஷிறா குலசிங்கமும் கௌரவ விருந்தினர்களாக பொதுநலவாய நாடுகளிற்கிடையிலான கனிஷ்ட பிரிவு பளு தூக்கும் போட்டி 2026ல் வெண்கல பதக்கம் வென்றுள்ள வீரர் திரு.பரமலிங்கம் தாரகனும் தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் 2025 குண்டு எறிதல் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ள வீரர் திரு.சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

நிகழ்வில் விருந்தினர்கள் பண்ட்வாத்திய இசையுடன் மைதானம் வரை அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், கொடியேற்றலுடன் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு விளையாட்டுக்கள் சாம்பிரதாயப் பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகின.

 

யாழ் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் திறன்களை மேம்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த தடகள விளையாட்டுப் போட்டியில், யாழ் மாவட்டத்தின் பிரதேச செயலர் ரீதியான அணிகள் கலந்து கொண்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *