திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பகுதியில் 3.2 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பாடசாலை ஆசிரியர் ஒருவர் இன்று (12) காலை கிண்ணியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிண்ணியா நடுத்தீவு ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் கிண்ணியா குறிஞ்சாக்கேணி அரபா ஆண்கள் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் என்பதுடன், காக்காமுனையைப் பிறப்பிடமாகவும் முனைச்சேனை பகுதியை வசிப்பிடமாகவும் கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சிவில் பாதுகாப்புக் குழுவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பக்கட்ட விசாரணைகளில், சந்தேகநபர் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்திருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். எனினும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கிண்ணியா போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

