இந்திய கப்பல்கள் மீதான தாக்குதலை ஏற்க முடியாது – ட்ரம்ப்

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இருந்து பயணித்த இந்தியர்களைக் கொண்ட கப்பல்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைத்தளப் பதிவில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், “ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இருந்து சென்ற இந்திய கப்பல்கள் மீது அவர்கள் (ஈரான்) மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் ஓமன் கடற்பகுதியில் இந்திய மாலுமிகள் அதிகம் பணியாற்றிய மூன்று எண்ணெய் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்தச் சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

அதேவேளை, பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பாலாவ் நாட்டுக் கொடியுடன் பயணித்த ‘செட்டெபெல்லோ’ என்ற எண்ணெய் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஈரான் துறைமுகத்தை நோக்கிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கப்பலில் 28 மாலுமிகள் இருந்ததுடன், அவர்களில் 24 பேர் இந்தியர்களாக இருந்தனர்.

இந்தக் கப்பல் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை மீறி பயணிக்க முயன்றதாக அமெரிக்க இராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதையடுத்து கப்பலின் இயந்திர அறை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் இந்திய மாலுமிகளான ஆதித்ய சர்மா, சிவானந்த் சவுரேஷியா மற்றும் தலைமைப் பொறியாளர் பட்னாலா சுரேஷ் ஆகியோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *