அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களுக்கு மத்தியில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரான் நாட்டின் வடகிழக்கு நகரமான மஷ்ஹத் பகுதியில் அமைந்துள்ள வெளியுறவு அமைச்சக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கருப்பு மற்றும் சிவப்பு கொடிகளை ஏந்திய ஆண்கள், பெண்கள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
கடந்த பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, ஈரான் பதிலடி கொடுத்ததால் மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்தது. இதன் விளைவாக உலகளாவிய எரிபொருள் விநியோகமும் பாதிக்கப்பட்டது. பின்னர் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி Donald Trump, அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம் ஜூன் 14ஆம் திகதி கையெழுத்தாகும் என அறிவித்துள்ளார். ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் ஹார்முஸ் ஜலசந்தி சர்வதேச கப்பல் போக்குவரத்திற்காக திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், அமைதி ஒப்பந்தம் குறித்து ஈரான் தரப்பில் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகாத நிலையில், ஒப்பந்தம் தொடர்பான சாத்தியம் இருப்பதாக மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நடைபெற்ற போராட்டத்தில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ஆகியோர் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்படவுள்ள அமைதி ஒப்பந்தத்தில் ஈரான் சில சமரசங்களை மேற்கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர்கள், ஒப்பந்தத்தின் விவரங்கள் வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

