புதிய திரிபுகளுடன் டெங்கு பரவல் அதிகரிப்பு – அரசாங்கம் எச்சரிக்கை

புதிய திரிபுகளுடன் கூடிய டெங்கு வைரஸ் தற்போது நாட்டில் பரவி வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் ஹம்சக்க விஜேமுனி தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பரவிய டெங்கு வைரஸுடன் ஒப்பிடுகையில், தற்போதைய வைரஸில் பல மாற்றங்கள் காணப்படுவதாக அவர் இன்று (14) பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

இந்த புதிய மாற்றங்களைக் கொண்ட வைரஸ் இதற்கு முன்னர் இலங்கை மக்களுக்கு தொற்றியிருக்காததால், பெருமளவிலானோருக்கு இந்நோய் தொற்றக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், அதேவேளை பொதுமக்களும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் டெங்கு நோயாளிகள் அதிகரிக்கும் நிலைமை முன்பும் ஏற்பட்டுள்ளது. அதற்கு நாங்கள் ஓரளவு தயாராக இருந்தோம். ஆனால் இம்முறை வைரஸில் சில மாற்றங்கள் காணப்படுகின்றன. இது முன்பிருந்த வைரஸ்களைவிட மாறுபட்டது,” என அவர் கூறினார்.

மேலும், நுளம்புகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் நோயாளிகள் தீவிர நிலைக்கு செல்லாமல் சிகிச்சை அளிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான பொறுப்பு அரசாங்கத்துடன் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“அரசாங்கம் செய்யக்கூடிய அனைத்தையும் நாங்கள் செய்கிறோம். அதேபோல் பொதுமக்களும் தங்கள் பங்களிப்பை அதிகபட்சமாக வழங்க வேண்டும்,” என பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *