மருத்துவ கல்லூரி நுழைவு பரீட்சை எழுதும் மாணவர்களை ஏமாற்றுவதற்கு டெலிகிராம் செயலி பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, இந்தியாவில் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை அந்தச் செயலிக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தேசிய பரீட்சை முகவரகத்தின் பரிந்துரையின் பேரில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நீட் மறு பரீட்சையையொட்டி, மோசடி கும்பல்கள் போலியான வினாத்தாள்களைப் பரப்பி மாணவர்களை ஏமாற்றுவதைத் தடுக்கும் பொருட்டு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே பதிவிடப்பட்ட செய்திகளைத் திருத்தும் வசதியையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இந்தியாவில் முடக்குமாறு டெலிகிராம் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த காலங்களில் பரீட்சைகள் முடிந்த பிறகு, பழைய செய்திகளைத் திருத்தி “வினாத்தாள் கசிந்துவிட்டது” போன்ற போலி ஆதாரங்களை உருவாக்க இந்த வசதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

