மட்டக்களப்பில் கண்டல் தாவர மீள்நடுகைத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

மட்டக்களப்பில் கண்டல் தாவர மீள்நடுகைத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் தலைமையில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

 

அக்ஷன் யுனிட்டி லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கே.கஜன் ஏற்பாட்டில் இத் திட்டத்திற்கான பிரான்ஸ்நிதி அனுசரனையாளர்களான அமலா நடராஜன் மற்றும் அன்டோனி ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்றது.

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பிரதேசத்தில் உள்ள மக்களின் வாழ்வாதார மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டு கண்டல் தாவரங்களை விருத்தி செய்யும் செயற்திட்டம், சைல்ட் பன்ட் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் பட்டிப்பளை, மண்முனை வடக்கு, ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

இவ் மீள் நடுகை செயற்திட்டமானது சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கான நீண்டகால செயற்திட்டமாக அமையவுள்ளது.

 

இக் கலந்துரையாடலின் போது இத்திட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பான விளக்கங்கள் அளிக்கையினுடாக காட்சிபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

மேலும் நீண்டகால இத்திட்டத்தினூடாக மீனவர் சமூகம் நன்மை பெறவுள்ளதுடன் களப்பில் உயிர் பல்வகைமை தன்மையை பாதுகாத்து அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

 

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் , அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் ஏ. எஸ். எம் சியாத், சைல்ட் பன்ட் நிறுவனத்தின் நாட்டுப் பணிப்பாளர் அதிதிகோஸ், நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் கலாநிதி தவசீலன், பிரதி பணிப்பாளர்கள், துறைசார் நிபுணர்கள், நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *