யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளுக்குத் தேவையான நிதி ஏற்கனவே அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அகழ்வுப் பணிகளுக்குப் பின்னரான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கும் நிதியுதவி வழங்கத் தயாராக இருப்பதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
செம்மணி மனித புதைகுழிப் பகுதியை நேரில் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
கடந்தகால அரசாங்கங்கள் தமிழ் மக்களை ஏமாற்றியதைப் போன்று தற்போதைய அரசாங்கம் செயற்படாது என்றும், செம்மணி புதைகுழி விவகாரத்தில் நிச்சயமாக நீதி நிலைநாட்டப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அதற்குத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் நீதி அமைச்சு முன்னெடுக்கும் எனவும் அவர் கூறினார்.
மேலும், வடக்கு அல்லது தெற்கு என்ற எந்தவொரு பாகுபாடும் இன்றி குற்றம் நிரூபிக்கப்படும் அனைவருக்கும் சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படும் என தெரிவித்த அவர், முறையான விசாரணைகள் மற்றும் ஆதாரங்கள் இன்றி எவரையும் கைது செய்ய முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, செம்மணி விவகாரத்தில் இராணுவத்தினர் தொடர்புடையவர்கள் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்தால், அவர்களுக்கு எதிராகவும் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வலியுறுத்தினார்.

