பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தின் தேசிய செயற்திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பம்

பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள “போதைப்பொருளற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்” என்ற புதிய தேசிய செயற்திட்டம் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (20) மட்டக்களப்பு இராஜயோக நிலையத்தில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வு மட்டக்களப்பு நிலையப் பொறுப்பாளர் சகோதரர் சுரேஸ் தலைமையில் இடம்பெற்றது.

 

இச்செயற்திட்டமானது “மனம் எவ்வாறோ, நாமும் அவ்வாறே” என்ற தலைப்பை அடிப்படையாகக் கொண்டு, “செழிப்பான மனதின் மூலம் போதைப்பாவனையிலிருந்து பாதுகாப்பாக இருப்போம்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படவுள்ளது.

 

இதன் மூலம் அடுத்த 18 மாத காலத்திற்குள் இலங்கையின் பல்வேறு பாகங்களிலுமுள்ள சுமார் 1 மில்லியன் (10 இலட்சம்) மக்களை நேரடியாகச் சந்தித்து போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

இப்பாரிய தேசிய செயற்திட்டத்தின் உத்தியோகப்பூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் கா. ஜெயந்தலால் ரத்னசேகர தலைமையில், எதிர்வரும் 28ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு கல்லடி கடற்கரையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

 

இது தொடர்பாக ஊடகங்களுக்குத் தெளிவூட்டிய நிலையப் பொறுப்பாளர் சகோதரர் சுரேஸ், இச்செயற்திட்டத்தின் கீழ் தேசிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ள விசேட வெளியீடுகள், போதைப்பொருள் விழிப்புணர்வுக்கான பிரத்தியேகப் பாடல் வெளியீடு மற்றும் பொதுமக்களின் விழிப்புணர்விற்காக ஐந்து வெவ்வேறு முக்கிய இடங்களில் விழிப்புணர்வுப் பதாதைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளமை போன்ற விபரங்களை வெளியிட்டார்.

 

இலங்கையில் கடந்த 35 வருடங்களாக இனம், மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் ஆன்மீக, வாழ்வியல் மற்றும் சமூக நற்பணிகளை ஆற்றிவரும் பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தின் இந்த புதிய விழிப்புணர்வுத் திட்டம், தற்போதைய சமூகச் சூழலில் மிக முக்கியமானதொரு நகர்வாகப் பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *