கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் ஔவை அவை நடத்தும் “ஔவை விழா – 2026” நிகழ்வு நேற்று(21) மட்டக்களப்பு – கல்லடிப் பாலம் ஔவை சிலை முற்றத்தில் நடைபெற்றது.
கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் தலைவர் கதிரவன் த.இன்பராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு ஆன்மீக அதிதிகளாக காயத்திரி பீடத்தின் பிரதம குரு சிவயோகச் செல்வன் சாம்பசிவம் சிவாச்சாரியார், சிரேஸ்ட விரிவுரையாளர் அருட்தந்தை அ.அ.நவரெத்தினம், மட்டக்களப்பு ஜாமீ உஸ் சலாம் ஜும்மாப்பள்ளிவாயல் பேஷ் இமாம் அஷ் ஷெய்க் றுசைத்துர் ரஹ்மான் உள்ளிட்டோரும், பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், டொக்டர். இளையதம்பி ஸ்ரீநாத், மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன், சட்டத்தரணி முனைவர் எஸ்.டீ.கலையமுதன், தில்லி கலை இலக்கியப் பேரவையின் செயலாளர் பன்னாட்டு பாவலர் பா.குமார், தென்னிந்தியப் பாடகர் ஜெய் கிருஷ், மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் சட்டத்தரணி திருமதி.சிவப்பிரியா வில்வரத்தினம் ஆகியோர் கலந்துகொண்ட நிகழ்வில் கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு வர்த்தக சங்கத் தலைவர் தேசபந்து முத்துக்குமார் செல்வராசா, சைவப்புலவர் வீ.ரஞ்சிதமூர்த்தி, செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட மேலும் பல பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அரசடி சுற்றுவட்டத்திற்கு அருகாமையில் இருந்து அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் கல்லடி பாலத்திற்கு அருகாமையில் உள்ள ஒளவையாரின் சிலைக்கு கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கெனடியால் மலர் மாலை அணிவிக்கப்பட்டது.
அரச அலுவலகர்களுக்கான மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான விவாதப் போட்டிகள், மாணவர்களின் கலை நிகழ்வுகளும், அதிதி உரைகளும் இடம் பெற்றதுடன், ஒளவை விழா சிறப்பு மலர் வெளியீடு இடம்பெற்றதுடன், கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.
இரண்டாவது தடவையாக மட்டக்களப்பில் இடம்பெற்ற ஒளவை விழாவிற்கு அனுசரனையினை தொடர்ச்சியாக வேல்முருகன் சகோதரர்கள் வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

