பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் குழுக்கூட்டம் பாராளுமன்ற கட்டிடத்தில் அமைச்சர் பேராசிரியர் அபேரத்ன தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உரையாற்றிய அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, பொத்துவில் பிரதேசத்தில் கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் பொத்துவில் பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயத்தின் 02 மாடி கட்டிடம் நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் 2012ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 17.48 மில்லியன் கிழக்கு மாகாண சபையினால் நிதி ஒதுக்கப்பட்டு 2025 ம் ஆண்டு 01 மாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பொத்துவில் பிரதேச விவசாயிகளின் நன்மை கருதி பொத்துவில் பிரதேச மாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயத்தின் தொடர் வேலையை நிறைவு செய்து பொத்துவில் பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகம் முழுமையாக செயற்படக்கூடிய வகையில் பூர்த்தி செய்து தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை மக்கள் சார்பில் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயத்தின் தொடர் வேலை தொடர்பாக கிழக்கு மாகாண பிரதம செயலாளரினால் அமைச்சுக்கு அனுப்பப்பட்ட அறிக்கை தொடர்பான விபரங்களை தெரிவிக்குமாறு அமைச்சின் மேலதிக செயலாளருக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.
கிழக்கு மாகாண பிரதம செயலாளரினால் பொத்துவில் மாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகத்தின் தொடர் வேலை தொடர்பாக அனுப்பப்பட்ட அறிக்கையில் பொத்துவில் பிரதேசத்தில் நாவுல மற்றும் செம்மணிகுளப் பிரதேசங்களில் உள்ள விவசாய குடும்பங்களுக்கும் ,பொது மக்களுக்கும் திறமையான மற்றும் பற்றுறுதி மிக்க சேவைகளை வழங்குவதற்காக பொத்துவில் பிரதேச மாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயம் ஒன்றை கட்டுவது அத்தியாவசிய தேவையாக அடையாளம் காணப்பட்டு 17.48 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு இதுவரை 1மாடி மாத்திரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. எனவே பொத்துவில் பிரதேச மாகாண நீர்ப்பாசன காரியாலயத்தின் தொடர் வேலையை நிறைவு செய்ய 20 மில்லியன் நிதி தேவைப்படுகிறதென கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியை பெற்றுக்கொள்ளுமாறு அமைச்சர் தெரிவித்தார்.

