வீடுகள் நிர்மாண முன்னேற்றத்தை வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் பார்வையிட்டார்

வீடமைப்பு, நிர்மாண மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் யுத்தத்தால் இடம்பெயர்ந்து பின்னர் மீள்குடியேறிய குடும்பங்களுக்காக 2026 ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளின் முன்னேற்றத்தை பார்வையிடும் நோக்கில் அமைச்சின் மேலதிக செயலாளர் ஈ.எம்.எஸ்.பி.ஜயசுந்தர அவர்கள் நேற்று (22) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

 

அமைச்சின் வீடமைப்பு திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மொத்தமாக 453 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றின் நிர்மாணப் பணிகள் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுப் பற்று, மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடுகளின் நிர்மாணத் தரம், பணிகளின் முன்னேற்றம் மற்றும் பயனாளர்களுக்கான வசதிகள் தொடர்பில் மேலதிக செயலாளர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

 

இதன் போது இத்திட்டப் பணிகளை விரைவாகவும் தரமான முறையிலும் நிறைவு செய்வதற்கான ஆலோசனைகளும் அதிகாரிகளுக்கு வழங்கினார்.

 

இந் நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் வீடமைப்பு, நிர்மாண மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் பணிப்பாளர் கே. ஜீ. பி. பூர்ணிமா அபேஸ்ரீ குணவர்த்தன, திட்டமிடல் பணிப்பாளர் டி.எல். டீபாணி பிரியங்கா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான ரீ. நிர்மலராஜ் எ.சுதாகரன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 

வீடமைப்பு வசதிகளை இழந்த மீள்குடியேறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *