கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் வீதி விபத்துகளுக்கு எதிராகவும், விபத்தில் உயிரிழந்த ஓய்வுபெற்ற அதிபருக்கு நீதி கோரியும் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 22.06.2026 அன்று கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட 64 வயதுடைய ஓய்வுபெற்ற அதிபர் பெருமாள் கணேசன், அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்தார். பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த உயிரிழப்புக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், கிளிநொச்சி பகுதியில் இடம்பெறும் பல்வேறு வீதி விபத்துகளுக்கு மது மற்றும் போதைப்பொருள் பாவனையே முக்கிய காரணம் என குற்றஞ்சாட்டினர்.
மேலும், போக்குவரத்து விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் தோல்வியடைந்ததாகக் கூறி, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொறுப்பதிகாரி பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன், ஐந்து நாட்களுக்குள் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து பதில் வழங்க வேண்டும்; இல்லையெனில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரித்தனர்.
இது தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரனிடம் நேரடியாக தமது ஆதங்கங்களை தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த மாவட்ட அரசாங்க அதிபர், சம்பந்தப்பட்ட பொலிஸார் மற்றும் சிவில் அமைப்புகளுடன் கலந்துரையாடி உரிய தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், கிளிநொச்சியின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறினார்.
அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

